Published : 13 Jun 2017 08:18 AM
Last Updated : 13 Jun 2017 08:18 AM

தமிழகத்தில் தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணனை பிடிப்பதற்கு போலீஸார் ஒத்துழைப்பதில்லை: தமிழக டிஜிபிக்கு மேற்குவங்க டிஜிபி கடிதம்

தமிழகத்தில் தலைமறைவாக இருக்கும் நீதிபதி கர்ணனைப் பிடிக்க தமிழக போலீஸார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மேற்குவங்க டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். தொழில்நுட்பம் சார்ந்த உதவிகள் மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழக டிஜிபிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி யாக 8 ஆண்டுகள் பணியாற்றிய வர் சி.எஸ்.கர்ணன். பின்னர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாகிச் சென்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உட்பட பல்வேறு நீதிபதிகள் மீது இவர் ஊழல் புகார் கூறி னார். இது தொடர்பாக உச்ச நீதிமன் றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி யது. நீதிபதி கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமை யிலான அமர்வு சமீபத்தில் உத்தர விட்டது. அதற்கு பதிலடியாக, தலைமை நீதிபதி உள்ளிட்டோ ருக்கு மனநலப் பரிசோதனை நடத்த கர்ணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி கேஹர் மற்றும் 6 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கர்ணன் கடந்த மே 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரை கைது செய்து 6 மாதம் சிறையில் அடைக்க கொல்கத்தா காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் மே 9-ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே, மே 9-ம் தேதி காலை சென்னை வந்த கர்ணன், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை யில் தங்கியிருந்தார். அவரை கைது செய்வதற்காக மேற்குவங்க டிஜிபி சுரஜித்கர் புர்கயஸ்தா தலைமையில் 5 தனிப்படை போலீஸார் விமானத்தில் 10-ம் தேதி காலை சென்னை வந்தனர். இதை அறிந்த கர்ணன், விருந் தினர் மாளிகையில் இருந்து மதுரை வழக்கறிஞர் ஒருவரது காரில் 9-ம் தேதி நள்ளிரவில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அவர் ஆந்திர மாநிலம் காள ஹஸ்தி, தடா ஆகிய பகுதிகளுக் குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொல்கத்தா போலீ ஸாருடன் இணைந்து தமிழக போலீஸாரும் ஆந்திரா சென்றனர். ஆனால், கர்ணன் இருப்பிடம் தெரியாததால் மீண்டும் சென்னை திரும்பினர்.

சென்னை சூளைமேடு சவு ராஷ்டிரா நகர் முதல் தெருவில் உள்ள கர்ணனின் மகன் சுகன் (37) வீட்டிலும் கொல்கத்தா போலீஸார் சோதனை நடத்தினர். கர்ணன் குறித்து சுகன் மற்றும் அவரது கார் ஓட்டுநரிடம் விசா ரணை நடத்தினர். கர்ணனின் உற வினர்கள், நண்பர்கள் சென்னை யில் பலர் உள்ளனர். அவர்களது பராமரிப்பில் அவர் தலைமறை வாக இருக்கலாம் என்று போலீ ஸார் சந்தேகப்படுகின்றனர். இதனால், தமிழக போலீஸாரின் உதவியுடன் சென்னை முழுவதும் கொல்கத்தா போலீஸார் கடந்த 34 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கர்ணனின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளை தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். அவருடன் இருந்த மதுரை வழக்கறிஞர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மேற்கு வங்க டிஜிபி சுரஜித்கர் புர்கயஸ்தா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘தமிழகத்தில்தான் நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள் ளது. அவரைப் பிடிப்பது குறித்து மே 10, 11, 12 தேதிகளில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டதை அறிவேன். ஆனால், அதற்குப் பிறகு தமிழக போலீஸார் எங்களுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அவரைப் பிடிக்க தமிழக போலீஸார் கூடுதல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக, தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

1955-ல் பிறந்த கர்ணனின் நீதிபதி பதவிக்காலம் கடந்த 11-ம் தேதியுடன் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x