

'உனது மனைவி இவள்தான்' என்று சிறுவயதிலேயே குழந்தைகளின் மனதில் திருமண ஆசையை வளர்த்து அவர்களை குற்றவாளிகளாக மாற்றாதீர்கள் என்று உளவியல் மருத்துவர் தேவராஜ் கூறினார்.
சென்னை மணலி புதுநகரில் வசிப்பவர் இன்பராஜ் (41). இவரது மனைவி கிருஷ்ணவேணி (40). இவர்களின் மகள் அனுபாரதி (17) வீட்டருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார்.
இவர்களின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் உள்ள திருவழுதிவிளை கிராமம். தூத்துக்குடியில் இன்பராஜின் வீட்டருகே உறவினர் கருவேலமுத்து என்பவரும் வசித்திருக்கிறார். இவரின் மகன் ஜெயராமன் (23). இரு குடும்பங்களும் நன்றாக பழகிய நிலையில் ஜெயராமனும், அனுபாரதியும் குழந்தைகளாக இருந்த நேரத்தில் இவர்கள் வளர்ந்ததும் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று இருவரின் பெற்றோர்களும் பேசிக் கொண்டனராம்.
பின்னர் இன்பராஜ் குடும்பத்தினர் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்னை யில் உள்ள இன்பராஜின் வீட்டிற்கு அடிக்கடி வந்து அனுபாரதியை திருமணம் செய்து வைக்குமாறு ஜெயராமன் கேட்க, படிக்கும் பெண்ணுக்கு இப்போது திருமணம் செய்து வைக்க முடியாது என்று கிருஷ்ணவேணி மறுத்தாராம். ஆத்திரம் அடைந்த ஜெயராமன், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த மாணவி அனுபாரதியின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்துவிட்டார்.
இதுகுறித்து மனோதத்துவ நிபுணர் தேவராஜ் கூறும்போது, "சிறு வயதிலேயே இவள் உனக்குத்தான் என்ற ஆசையை ஜெயராமனின் மனதில் விதைத்ததுதான் இந்த கொலைக்கு முக்கிய காரணம். குழந்தைகளிடம் விளையாட்டுக்காகக் கூட இப்படி பேசக்கூடாது. இது மிகப்பெரிய தவறு. ஒவ்வொரு பெற்றோரும் இதில் கவனமாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் மனதில் வேறு சிந்தனைகளை வளர விடாமல், பெற்றோரின் திட்டங்களை விதைப்பது மோசமான செயல்களுக்கு தொடக்கமாகிவிடும்" என்றார்.
அடக்கமானது மாணவியின் டாக்டர் கனவு
கொலை செய்யப்பட்ட மாணவி அனுபாரதியின் உறவினர் ஒருவர் கூறும்போது, "அனுபாரதி நன்றாக படிக்கக்கூடிய பிள்ளை. அரையாண்டு தேர்வில் ஆயிரத் துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியிருந்தாள். திங்கள்கிழமை அவளுக்கு வேதியியல் தேர்வு இருந்தது. அதற்காக ஞாயிற்றுக் கிழமை காலை முதலே அறையில் படித்துக்கொண்டு இருந்தால். டாக்டர் ஆகும் ஒரே குறிக் கோளுடன் இருந்த அவளுடன் சேர்ந்து அவளின் கனவும் அடக்கமாகிவிட்டது” என்றார்.