பேரவையில் மைக், இருக்கைகள் உடைப்பு: ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவினரின் ரகளை

பேரவையில் மைக், இருக்கைகள் உடைப்பு: ரகசிய வாக்கெடுப்பு கோரிய திமுகவினரின் ரகளை
Updated on
1 min read

ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே நடத்த வேண்டும் எனக்கோரி திமுகவினர் மைக், இருக்கைகளை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். கடும் அமளி காரணமாக அவையை 1 மணி வரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர்.

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியதுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்தனர். ஓபிஎஸ் தரப்பைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் தரப்பிலும் ரகசிய வாக்கெடுப்புக்கு வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அவையில் பேச எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், கே.ஆர்.ராமசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.நட்ராஜ் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது "அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிறைக்கைதிகள் போல் அழைத்துவரப்பட்டுள்ளனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதே உண்மையான ஜனநாயகத்துக்கு வித்திடும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன. எனவே, வேறு ஒரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்" என்றார்.

ஆனால், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கூறினார். இதனால், அதிருப்தியடைந்த ஓபிஎஸ் அணியினர், வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். திமுக எம்.எல்.ஏ பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினார். சபாநாயகரின் இருக்கை, மேஜை, மைக் உள்ளிட்ட பொருட்கள் உடைத்தெறியப்பட்டன. இன்றைய அலுவல் நிரல் அடங்கிய காகிதங்களை கிழித்தெரிந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், அவையை 1 மணிவரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். அவரை அவை பாதுகாவலர்கள் பத்திரமாக அறைக்கு அழைத்துச் சென்றனர். சபாநாயகர் வெளியேறிய பின்னரும் அவையில் திமுகவினர் தொடர்ந்து முழக்கமிட்டனர். திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in