

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக்குழு அமைப்பது, சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்துவிட்டு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது, தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட் சோர்சிங் முறையிலான பணி நியமனங்களை நீக்கிவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்துக்கு வட சென்னை மாவட்ட தலைவர் எம்.அந்தோணிசாமி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வி போராட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும், ஊதியக்குழு அமைக்கப் படும், தற்காலிக பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அவர் அறிவித்து ஓராண்டு ஆகப் போகிறது. அவரது அறிவிப்புகளை நடைமுறைப் படுத்தும் வண்ணம் உடனடியாக அரசாணை வெளி யிடப்பட வேண்டும்” என்றார்.
அரசு ஊழியர் சங்க தென் சென்னை மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.பட்டாபி ஆகியோர் கோரிக்கைகளை எடுத்துரைத்துப் பேசினர். அகில இந்திய கணக்கு மற்றும் தணிக்கை ஊழியர் சங்க பொருளாளர் கே.ரமேஷ், தென்மண்டல காப்பீட்டு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் பொருளாளர் வி.ஜானகிராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் கே.எம்.தியாகராஜன் நிறைவுரை ஆற்றினார். வடசென்னை மாவட்ட இணைச் செயலாளர் ஜெ.சரஸ்வதி, தென் சென்னை மாவட்ட இணைச் செயலாளர் டி.கோவிந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.