Published : 25 Feb 2014 04:24 PM
Last Updated : 25 Feb 2014 04:24 PM

கோவை: கள்ளச்சாராயத்தை ஒழிக்க கரகாட்டம்

கள்ளச்சாராயத்தின் தீமைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து கோவை மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை நடத்தியது.

தமிழ்நாடு அரசு, பல்வேறு மாவட்ட தலைமையிடங்களிலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு விதமான பிரச்சாரங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கடந்த வாரம் கோவை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் நகரெங்கும் ஊர்வலமாகச் சென்று கள்ளச்சாராய விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு புகைப்படம் மற்றும் கார்ட்டூன் கண்காட்சியையும், கரகாட்டக்கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நடத்தியது. மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம் துவங்கி வைத்தார். கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையும், மதுவினால் ஏற்படும் தீமை குறித்து விளக்கப்படமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குடியால் வருந்தும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை அளித்தனர்.

புதுவாழ்வு கலைக் குழு சார்பாக கள்ளச்சாராயக் கேடுகள் குறித்த பாடல்களை பாடியபடியே கரகாட்டமும், தப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஆட்சியர் குறைகேட்பு நாள் என்பதால் இங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந் நிகழ்வை கண்டு ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x