Last Updated : 17 Jun, 2017 09:17 AM

 

Published : 17 Jun 2017 09:17 AM
Last Updated : 17 Jun 2017 09:17 AM

தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தீவிரம்: 5 மாதத்தில் 3 ஆயிரம் பேர் பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 5 மாதத்தில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களைவிட, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித் துள்ளது. பெரும்பாலும் மழைக் காலங்களில்தான் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது வெயில் காலத்திலும் டெங்குவின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. கடந்த 5 மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 3 ஆயிரத்து 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு (2017) ஜனவரி 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரையிலான 5 மாதத்தில் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில், “நாடுமுழுவதும் கடந்த 5 மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 11 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகமாக கேரளாவில் 4,735 பேரும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 259 பேரும், கர்நாடகாவில் 759 பேரும், ஆந்திராவில் 512 பேரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களைவிட தமிழகம் உண்மையான பாதிப்பு விவரங்களை மத்திய அரசிடம் கொடுக்கிறது. அதனால் தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக இருப்பதுபோல் தெரி கிறது” என்றனர்.

இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (டிபிஎச்) முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு பொது சுகாதார சங்கத்தின் தலைவருமான டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:

ஏடிஸ் கொசுக்களின் வாழ்நாள்..

பொதுவாக கொசுக்களின் வாழ் நாள் 20 நாட்களாக இருந்தது. ஆனால், தற்போது அது 40 நாட்களாக அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச் சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முதலில் மழைக்காலத்தில் மட்டுமே உற்பத்தியாகின. அதனால் மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது அந்தக் கொசுக்கள் மழை, குளிர் மற்றும் கோடைக்காலத்தில் வாழ் வதற்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டுள்ளன. அதனால்தான் கோடைக்காலத்தில் டெங்கு காய்ச் சலின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

சிறிய பொருட்களில் தேங்கி யிருக்கும் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி வந்த ஏடிஸ் கொசுக்கள், தற்போது பெரிய பொருட்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் உற்பத்தியாகி வருகிறது. மலேரி யாவை பரப்பும் அனபிலஸ் கொசுக்களை விரட்டிவிட்டு, அந்த இடங்களை ஏடிஸ் கொசுக்கள் ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் மலேரியா பாதிப்பு குறைந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மழைக்காலத்தில் மட்டும் எடுக்காமல், ஆண்டு முழுவதும் தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்போதுதான் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு டாக்டர் எஸ்.இளங்கோ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x