

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மனிதவளக் குறியீட்டில் இந்தியாவுக்கு 105-வது இடத்தில் இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கருப்புப் பணத்தை மீட்போம், வேலையில்லாத் திண்டாடத்தை ஒழிப்போம், இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்து நரேந்திர மோடி ஆட்சியைப் பிடித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கருப்புப் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. குறைந்த ஆட்சி, நிறைந்த ஆளுமை என மோடி முழங்கினார்.
மோடி அரசின் தவறான செயல்பாடுகளினால் மனிதவளக் குறியீட்டில் உலகில் 105-வது இடத்தில் இந்தியா உள்ளது. வங்கதேசம், பூடான், இலங்கை போன்ற நாடுகள் கூட இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளது.
ஆனால், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை வெளியேற்றப்படுகின்றனர். ரகுராம் ராஜன் மீது குற்றம்சாட்டிய சுப்பிரமணியன் சுவாமியை பிரதமர் மோடி கண்டித்திருக்கிறார். காலம் கடந்த கண்டிப்பு என்றாலும் இது வரவேற்கத்தக்கது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா போன்றவர்களே பொருளாதார துறையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த சாதனையும் இல்லை என கூறியுள்ளனர்.
காவிரி நதிநீர் ஆணையம், ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு, மீனவர் பிரச்சினை என தமிழகத்தின் உரிமைகளை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. மொத்தத்தில் மோடி ஆட்சியில் மாணவர்கள், இளைஞர்கள், நடுநிலையாளர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது'' என்று வீரமணி கூறியுள்ளார்.