

வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு, 3 சலுகைகள் அளிக்க வேண்டும் எனக்கூறி, அவரது கணவர் முருகன் சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வேலூர் பெண்கள் சிறையில் கடந்த 2010-ம் ஆண்டு செல்போன் பயன்படுத்திய வழக்கில் இருந்து நளினி சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். நளினியை அவரது ரத்த உறவுகள் மற்றும் வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நளினியின் கணவர் முருகன் சனிக்கிழமை மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மனைவி நளினிக்கு மினரல் வாட்டர் வழங்கவேண்டும். ரத்த உறவினர்களைத் தவிர மற்றவர்கள் சந்திக்கவும், அவர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களைப் பெறவும் பாதுகாப்பு காரணங்களை கூறி தடை கூடாது.
சிறையில் உள்ள சக பெண் கைதிகளை நளினி சந்திக்கவும், அவர்களுடன் சகஜமாகப் பேசவும் அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக சனிக்கிழமை காலையில் விரதம் இருக்கும் முருகன், காலை உணவைச் சாப்பிடவில்லை. பகல் 12 மணிக்கு சிறை நிர்வாகம் வழங்கிய உணவை வாங்க மறுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
உயர் பாதுகாப்பு-2 பிரிவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முருகனிடம் சிறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சிறை விதிகளின்படி 24 மணி நேரம் ஒரு கைதி சாப்பிடாமல் இருந்தால்தான் உண்ணாவிரதம் இருப்பதாகக் கணக்கில் கொள்ளப்படும். சனிக்கிழமை காலைதான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முருகன் மனு கொடுத்துள்ளார். எனவே முருகனை சமாதானப்படுத்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.