

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல், கல்லூரிக்குள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கல், சாலையில் பேருந்தை நிறுத்தி வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் என பல செய்திகள் கடந்த சில வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது பல உண்மைகள் தெரியவந்தன.
சென்னை நகருக்குள் பல கல்லூரிகள் இருந்தாலும் அடிக்கடி மோதல் நடப்பது ஒரு சில கல்லூரிகளுக்குள் மட்டும்தான். அவற்றில் குறிப்பிடத்தக்கவை மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி. இந்த 3 கல்லூரி மாணவர்களும் திரும்பத் திரும்ப சண்டை போடுவது இன்று நேற்று அல்ல, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடக்கிறது. இந்த சண்டையை தடுக்க சில முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டாலும் குறிப்பிடத்தக்க பலன் கிடைக்கவில்லை.
இந்த 3 கல்லூரி மாணவர்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மோதிக்கொள்ள இவர்களுக்குள் முக்கிய பிரச்சினைகளும் இல்லை. ஒவ்வொரு கல்லூரி மாணவனும் பிற கல்லூரி மாணவனை வேற்றுக் கிரகவாசியைப் போல பார்ப்பது மட்டுமே இவர்களுக்குள் இருக்கும் ஒரே பிரச்சினை. இவர்களுக்குள் சண்டை ஏற்பட அடிப்படை காரணம் 'பஸ்'.
இந்த 3 கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்துதான் வருகின்றனர். இப்படி ஒரே பேருந்தில் 3 கல்லூரி மாணவர்களும் சந்திக்கும் போதுதான் பிரச்சினை உருவாகிறது. பேருந்துக்குள் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை கல்லூரி பிரச்சினையாக மாறிவிடுகிறது. தங்கள் கல்லூரி மாணவியை பிற கல்லூரி மாணவர்கள் கிண்டல் செய்யும் போதும், வம்பிழுக்கும் போதும் பிரச்சினை ஏற்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதற்கும் இதுதான் காரணம்.
மாநிலக் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பல்வேறு பேருந்துகளில் வந்தாலும், பிரச்சினைகள் ஏற்படுவது சில பேருந்துகளில் மட்டும்தான். பெரம்பூரில் இருந்து வரும் 29ஏ, 29சி, அம்பத்தூரில் இருந்து வரும் 27எல், டோல்கேட்டில் இருந்து 6டி, வியாசர்பாடியில் இருந்து 2ஏ, கேகே நகரில் இருந்து வரும் 12ஜி ஆகிய வழித்தடங்களில் வரும் பேருந்துகளில்தான் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.
இதேபோல பச்சையப்பன் கல்லூரிக்கு ஆவடியில் இருந்து வரும் 40ஏ, பெசன்ட் நகரில் இருந்து 47டி, பூந்தமல்லியில் இருந்து 53டி, பிராட்வேயில் இருந்து 15டி ஆகிய வழித்தட பேருந்துகளில் மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனர்.
நந்தனம் கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகளில் 23சி, 54எல், 45பி ஆகிய பேருந்துகளில் மாணவர்கள் சண்டை போடுகின்றனர். ஒரு கல்லூரிக்கு ஒரு வழித்தடத்தில் செல்லும் பேருந்துக்கு ஒரு மாணவர் தலைமையாக இருந்து மற்றவர்களை வழி நடத்துகிறார். இவருக்கு 'ரூட் தலை' என்று பெயர். ஒவ்வொரு ரூட்டிற்கும் ஒரு தலை என ஒரே கல்லூரியில் பல ரூட் தலைகள் உள்ளனர். மாநிலக் கல்லூரியில் 4, பச்சையப்பன் கல்லூரியில் 4, நந்தனம் கல்லூரியில் 5 ரூட் தலைகள் உள்ளனர். நந்தனம் கல்லூரியில் 'சி' ரூட் தலைக்கு தனி அதிகாரமே இருக்கிறதாம். ரூட் தலைகள் வைத்ததுதான் அந்த பேருந்தில் சட்டம். அந்த ஒரு சில ரூட் தலைகள் செய்யும் பிரச்சினைதான் கல்லூரி பிரச்சினையாக வெடிக்கிறது.
ஒவ்வொரு கல்லூரி வளாகத்துக் குள்ளும் இருக்கும் மரத்தடியில் இந்த தலைகள் தங்களுக்கென்று தனி இடம் வைத்துள்ளனர். ரூட் தலையின் தலைமையில் அந்தந்த ரூட்டில் செல்லும் மாணவர்கள் வாரத்துக்கு 4 முறையாவது மரத்தடியில் கூடி, பஸ்சில் மற்ற கல்லூரி மாணவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளை கூறுகின்றனர். அதன் பின்னர் அந்த கல்லூரி மாணவர்களைத் தாக்க, எந்த இடத்தில் கூடி ஒன்றாக பேருந்தில் ஏற வேண்டும், பேருந்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல திட்டங்களை அந்த மரத்தடியிலேயே திட்டமிட்டு மறுநாள் செயல்படுத்துகின்றனர். கடந்த வாரம் மாநிலக் கல்லூரியில் இதேபோல கூட்டம் போட்டு பேசிக் கொண்டிருந்தவர்களை ஒரு பேராசிரியர் விரட்டி அடித்துள்ளார்.