Published : 08 Oct 2013 10:05 PM
Last Updated : 08 Oct 2013 10:05 PM

மோடியை சந்தித்த பிறகே பாஜகவில் இணைய முடிவெடுத்தேன்: எஸ்.வி.சேகர்

அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான எஸ்.வி.சேகர், எந்தக் கட்சியிலும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

தமிழ்த் திரைப்பட, நாடக நடிகரான எஸ்.வி.சேகர் 2006-ல் அ.தி.மு.க.வின் எம். எல்.ஏ.வாக இருந்தார். பின் 2009-ல் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார்.

பிறகு, 2011- ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சில மாதங்களில் அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். பிறகு, எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்த எஸ்.வி. சேகர், செவ்வாய்க்கிழமையன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பா. ஜ.க.வின் தேசிய செயலர் தமிழிசை செளந்தரராஜன், மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலர் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் எஸ்.வி. சேகர் கூறுகையில், “எனக்கும் பாஜகவுக்கும் இயற்கையாகவே தொடர்பு இருந்தது. இந்த நிலையில், குஜராத் முதல் அமைச்சரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை ஆன்-லைனில் தொடர்பு கொண்டேன். பிறகு, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகே பாஜகவில் சேர முடிவு செய்தேன்.

அக்கட்சியின் தேசியப் பற்று, கடவுள் நம்பிக்கை என் கருத்தோடு ஒத்துப்போகிறது. அதனால் அந்தக் கட்சியில் சேர்ந்துள்ளேன் . பதவிக்காகவோ அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காகவோ நான் பா.ஜ.க.வில் சேரவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வேன்” என்றார் எஸ்.வி.சேகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x