இலவசம் என்றால் விவாதம் தேவை இல்லையா?

இலவசம் என்றால் விவாதம் தேவை இல்லையா?
Updated on
3 min read

இன்று இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் தேர்தலுக்கு பிறகு புதிய அமைச்சரவை பொறுப்புபேற்கும் போதெல்லாம், முதல் நாள் முதல் கையெழுத்து என சில செலவு திட்டங்களை அறிவிக்க துவங்கியுள்ளன. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. மே 23, 2016 அன்று பதவியேற்ற சில நிமிடங்களில், ஐந்து புதிய செலவுத் திட்டங்களுக்கு முதல மைச்சர் கையெழுத்திட்டார். இதனால் இந்த திட்டங்கள் எல்லாம் அன்றே நடை முறைக்கு வந்தன என்று நம்பப்பட்டது. இந்த திட்டங்கள் எல்லாம் மக்களின் தீராத அல்லது உடனடியாகத் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளா? அவற்றை சில நாட்கள் தள்ளிப்போடுவதால் மக்கள் எண்ணற்ற துயரத்திற்கு உள்ளாவார்களா? இது போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்க, இந்த நடைமுறை நமது ஜனநாயக அமைப்புகளை கேள்விக்கு உள்ளாக்குவதும் வருந்தத்தக்கது.

2016-17 ஆண்டின் பட்ஜெட் இன்னும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் படாமல் இருக்க இதற்கான நிதியை எங்கிருந்து அரசு எடுக்கிறது? அரசும், மின்சார விநியோக வாரியமும் மட்டுமே மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது. இதற்கு மாநில மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் ஒப்புதல் வேண்டும். இந்த வாரியம் உயர்நீதிமன்ற அதிகாரம் பெற்ற தன்னிச்சை நிறுவன மாகும். பொதுவாக ஒரு குறிப்பிட்ட பயனாளிக்கு இலவச மின்சாரம் வழங்கினால் அதனால் மின்சார விநி யோக வாரியத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை அரசு தனது சொந்த நிதியி லிருந்து கொடுக்கவேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் கூறியுள் ளது. எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 50 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டால் அதற்கான பணத்தை தமிழக அரசு மின்சார விநியோக வாரியத்திற்கு கொடுக்க வேண்டும்.

மே 23, 2016 தேதியிட்ட அரசாணை G.O (Ms) No 36, என்பதில் வீடுகளுக்கு மாதம் 50 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதால் மின்சார விநியோக வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.1,607 கோடி தமிழக அரசு கொடுக்கவேண்டிவரும் என்றும், ஆனால் பட்ஜெட் நடைமுறைக்கு வராததால் இதற்கான பணத்தை ‘எதிர் பாரா செலவு நிதியிலிருந்து’ (Contingency Fund) எடுக்கவேண்டும் என்று கூறுகி றது. ‘எதிர்பாரா செலவு நிதியிலிருந்து’ பணத்தை எடுப்பதற்கு பணம் ஒதுக்கு சட்டமும், ஆளுநரின் ஆணையும் தேவை இல்லை. எனவே, ஆளுநரின் ஆணைப்படி இந்த G.O (Ms) No 36 இல்லை. ஆளுநரின் ஆணை இல்லாமல் வெளியிடப்படுவதை எப்படி அரசு ஆணை என்று அழைக்கலாம் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, இந்த நிதியிலிருந்து பணம் எடுக்கவேண்டிய அளவிற்கு இந்த செலவு முக்கியமானதா?

இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ள மின்சார மானியம் என்பது அவசரமான, எதிர்பாராத செலவு அல்ல. இதனை மக்கள் பட்ஜெட் செலவாக விவாதித்து செயல் படுத்தலாம். அண்மைக் காலத்தில் தமிழகம் மின்சார பற்றாக்குறையை கண்டது. மக்கள் தாங்களாகவே முன் வந்து எங்களுக்கு இலவச மின்சாரம் வேண்டாம், ஆனால் தொடர்ந்து மின்சார உற்பத்தியை அதிகமாக்க முதலீடு செய்யுங்கள் என்று கூறினால், பட்ஜெட் செலவின் அமைப்பே மாறிவிடும். இது தான் சரியான மக்கள் பட்ஜெட்டின் அணுகு முறையாக இருக்கும். இதற்கான சாத்தியத்தை இந்த அரசாணை மாற்றி விட்டது. மேலும், இந்த இலவச மின்சார அரசாணையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கவில்லை என்றால் என்ன செய்யவேண்டும்? மானியம் என்றாலே விவாதத்திற்கு அப்பாற்பட்ட அல்லது அதை பற்றிய விவாதம் என்பதே மக்கள் விரோத நடவடிக்கை என்ற எண்ணத்தை தமிழக அரசியல் ஏற்படுத்திவிட்டது கவலைக்குரியது.

மே 23, 2016 அன்று முதலமைச்சர் வெளியிட்ட மற்ற ஐந்து திட்டங்களுக் கும் அரசாணை வெளியாகியுள்ளதா என்று தெரியவில்லை. அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன? அவை எல்லாம் இன்னும் நடைமுறைக்கு வர வில்லை என்றால், மின்சார மானியத்திற்கு மட்டும் ஏன் இந்த அவசரம்?

கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டமன்ற கூட்டத் தொடரில் அவ்வப்போது, குறிப்பாக ஒவ்வொரு துறைக்கான மானி யக் கோரிக்கை வரும்போது, முதல மைச்சர் சட்டமன்ற விதி 110 கீழ் சில அறிவிப்புகளை வாசிக்கின்றார். இந்த அறிவிப்புகள் பெரும்பாலானவை அரசின் செலவு திட்டங்கள் தொடர் பானவை. அரசின் செலவு திட்டங்களை விவாதித்துதான் சட்டமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும். இதற்கு இந்திய அரசியல் சட்டம் பிரிவு 114 வழி செய் கிறது. ஆனால் தமிழக சட்டமன்ற விதி 110 சொல்வது யாதெனில், “(1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். (2) அவ்வறிக்கை யின் மீது அப்போது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது. (3) உள்விதி 1-யின் கீழ் அறிக்கை அளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவர் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன் கூட்டியே செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.” எனவே, விவாதிக்கப்பட வேண்டிய, சட்டமன்றத்தில் சட்டமாக்கப் படவேண்டிய, ஆளுநரின் இசைவு பெறவேண்டிய ஒரு செலவு திட்டத்தை சட்டமன்ற விதி 110 கீழ் அறிவிப்பது சட்டமன்ற மரபுக்கும், ஜனநாயக விவாத அமைப்புக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானது அல்லவா? மேலும் ஆளுநரின் ஆணைப்படி வெளியிடப்படும் அரசாணை களிலும் கூட முதலமைச்சர் விதி 110 கீழ் அறிவித்தலால் இந்த செலவினம் நடைமுறைக்கு வருவதாகக் கூறுகிறது. இது ஆளுநரின் அரசியல் சட்ட நிலையை சிறுமைப்படுத்துவதாக இல்லையா? என்று அரசியல் நோக்கர்கள், சட்ட வல்லுநர்களும் கூறுகின்றனர்.

முதல்வர் கையெழுத்திட்ட 5 கோப்புகள்

வீடுகளுக்கு மாதம் 50 யூனிட் இலவச மின்சாரம்: (இதற்கு ஆகும் செலவு ரூ. 1,607 கோடி)

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட், விசைத்தறிக்கு 750 யூனிட்: (இவையிரண்டுக்கான செலவு மதிப்பிடப்படவில்லை)

கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடி: (இதற்கான செலவு ரூ. 5,780 கோடி)

தாலிக்கு தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்வு: (இது மதிப்பிடப்படவில்லை)

டாஸ்மாக் கடை செயல்படும் நேரம் குறைப்பு. 500 கடைகளை மூட உத்தரவு: (இது செலவு பிடிக்காத விஷயம்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in