Published : 16 Apr 2017 02:14 PM
Last Updated : 16 Apr 2017 02:14 PM

வனத்தில் விடப்பட்ட குட்டி யானை கிராமங்களுக்குள் ஊடுருவல்: காரமடை மலையடிவார கிராம மக்கள் அச்சம்

ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு கோவை காரமடை வனப்பகுதியில் விடப்பட்ட குட்டியானை அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கோவை மாவட்டம் பெரியதடாகம் பகுதியில் காயத்துடன் சுற்றி வந்த 7 வயது ஆண் யானை அப்பகுதியில் வீடுகளையும், கடைகளையும் சேதப்படுத்தி வந்தது. அதை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்நிலையில் கடந்த மாதம் 14-ம் தேதி தாயிடம் இருந்து பிரிந்து மாங்கரை வனத்துறை குடியிருப்புக்குள் அந்த குட்டியானை நுழைந்தபோது, அதை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த குட்டியானை சாடிவயல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. வாயில் ஏற்பட்டிருந்த புண்ணுக்கு சிகிச்சையும், உடல்நலம் பெறுவதற்காக சத்தான உணவுகளும் வழங்கப்பட்டன. இதனால் குட்டியானை உடல்நலம் பெற்றது.

இந்நிலையில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு நேற்று முன்தினம் (ஏப்.14) அந்த குட்டியானை காட்டில் விடப்பட்டது. சாடிவயல் முகாமில் இருந்து லாரி மூலமாக அழைத்து வரப்பட்ட குட்டியானை மேட்டுப்பாளையம் அருகே உள்ள அத்திக்கடவு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே காட்டை விட்டு வெளியே வந்த யானை, பில்லூர் அணை சாலையை மறித்து வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் விரட்டத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி யானையை காட்டுக்குள் விரட்டினர். இதனால் நிலைமை சீரடைந்தது.

இந்நிலையில், நேற்று காலை மீண்டும் அந்த யானை காட்டைக் கடந்து மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அன்சூர், வெள்ளியங்காடு கிராமங்களுக் குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி யுள்ளது. பெரியதடாகம் பகுதியில் சுற்றித் திரிந்ததுபோலவே, இங்கும் வீடுகளைத் தேடிச் சென்று மக்களை விரட்டி வருகிறது. மேலும் சாலையில் நின்று கொண்டு வாகனங்களை மறிப்பது, துரத்துவது என தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. பகல் நேரத்தில் கூட கிராமத்துக்குள் யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

பொதுமக்கள் கூறும்போது, ‘வேறொரு பகுதியில் இருந்த யானையை, இங்கு கொண்டுவந்து விட்டதும், காட்டுக்குள் சென்றுவிட்டதா என்பதை கண்காணிக்காததாலும் யானை காட்டை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்துவிட்டது. இதனால் யாரும் வெளியே செல்ல முடியாமல் உள்ளோம். அதை பிடித்த பகுதியிலேயே கொண்டு சென்று விட வேண்டும்’ என்றனர்.

கிராம மக்கள் புகாரைத் தொடர்ந்து யானை ஊடுருவலைத் தடுக்க சிறப்பு யானைத் தடுப்பு காவலர்கள் 20 பேர் அன்சூர், வெள்ளியங்காடு கிராமப்பகுதியில் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். நேற்று முழுவதும் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டியும் கூட அந்த யானை காட்டுக்குள் செல்லாமல் அதே பகுதியில் சுற்றி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x