சாலைகளை வகைமாற்றம் செய்து மது வணிகர்களைக் காப்பாற்ற வேண்டாம்: ஸ்டாலின் கோரிக்கை

சாலைகளை வகைமாற்றம் செய்து மது வணிகர்களைக் காப்பாற்ற வேண்டாம்: ஸ்டாலின் கோரிக்கை
Updated on
3 min read

மதுபான விற்பனைகளை மீண்டும் தொடங்கும் வண்ணம் சாலைகளை வகைமாற்றம் செய்து மது வணிகர்களைக் காப்பாற்ற வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், அதைச்சுற்றி 500 மீட்டர் தொலைவிலும் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 31.3.2017 அன்று வழங்கியிருக்கிறது அந்த தீர்ப்பினையொட்டி நாடு முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மூடிய கடைகளை மீண்டும் அதே பகுதியில் உட்புறமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி திறக்கப்படும் அவலம் ஏற்பட்டு, அதை ஆங்காங்கே மக்கள் எதிர்த்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாமக நிறுவனர் இன்றைய தினம் அவரது கட்சி சார்பில் இந்த வழக்கில் முக்கியத் தீர்ப்பு வருவதற்கு பெரும் பங்காற்றிய வழக்கறிஞர் பாலு மூலம் ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், “தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் போன்றவற்றை மாநகர சாலைகள், நகர சாலைகள், பெரிய மாவட்ட சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை பிசுபிசுக்க வைக்கும் முயற்சியில் மத்திய அரசும், இங்குள்ள மாநில அரசும் ஈடுபடுவதாகவும், அதற்கு எதிராக திமுக சார்பில் குரல் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுகவைப் பொறுத்தமட்டில் மதுவிலக்கு கொள்கைக்கு என்றைக்கும் ஆதரவாக இருக்கும் கட்சி என்பதும், தலைவர் கருணாநிதி ஆட்சியிலிருந்த காலத்தில்தான் மதுக்கடைகளை படிப்படியாக மூடும் முடிவினை முதன் முதலாகஎடுத்தார் என்பதும் தமிழக மக்கள் அறிந்ததே. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து 22.12.2008 அன்று வைத்த கோரிக்கையை ஏற்று 1300 மதுக்கூடங்களையும், 128 மதுக்கடைகளையும் மூடியதுதான் திமுக ஆட்சி என்பதை நினைவுகூற விரும்புகிறேன்.

அதுமட்டுமின்றி மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சென்ற சட்டமன்ற தேர்தல் அறிக்கை மூலம் மக்கள் மன்றத்தில் வாக்குறுதியே கொடுத்திருக்கிறது திமுக. கொள்கையளவில் உடன்பாடான இந்த தீர்ப்பிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அறிக்கை விட்டு உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினேன். ஆகவே தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை காப்பாற்றுவதற்காக மத்திய அரசும், மாநிலத்தில் இருக்கும் அதிமுக அரசும் ''சாலைகளின் பெயர்களை வகை மாற்றம் செய்ய எடுக்கும் முயற்சி'' கண்டிக்கத்தக்கது. அதற்கு திமுகவின் சார்பில் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றம் சென்ற 31.3.2017 அன்று அளித்த தீர்ப்பின் பத்தாவது பக்கத்தில், ''மத்திய அரசின் கொள்கை முடிவு, தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சிலின் முடிவு, மத்திய அரசு அவ்வப்போது மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள அறிவுரைகள், மதுக்குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்ற 1988-ஆம் வருடத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் நோக்கம் போன்றவற்றின் அடிப்படையில்தான் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை வைக்கக் கூடாது, புதிய கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது'' என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் பாண்டா, ''தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கும், புதிய மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாது என்றும் 15.12.2016 உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். அதே போல் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மார்ச் 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ''மாநில நெடுஞ்சாலைகள் நெடுகிலும் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டிருப்பதாகவும், புதிய லைசென்ஸுகள் கொடுக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும்'' ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இப்படி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூடுவதையும், புதிய மதுக்கடைகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பதையும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ள மத்திய அரசும், மாநில அரசும் இப்போது சாலைகளின் பெயர்களை மாற்றி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து தப்பிக்க நினைப்பது வேதனையளிக்கிறது.

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள 2015க்கான சாலை விபத்துகள் பற்றிய அறிக்கையில் ''நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1.24 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. அதனால் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் காயமடைகிறார்கள். 46110 பேர் மரணமடைகிறார்கள். மாநில நெடுஞ்சாலைகளில் 1.13 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. அதனால் 1.24 லட்சம் பேர் காயம்படுகிறார்கள். 39 352 பேர் மரணமடைகிறார்கள்'' என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த சாலை விபத்துகள் பயணிப்போரை மட்டுமின்றி, அந்த சாலைகளை பயன்படுத்தும் மக்களையும் எந்த அளவிற்கு ஆபத்துக்குள்ளாக்குகிறது என்பது இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையிலேயே தெரிய வருகிறது.

சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்தில் இதுவரை செயல்பட்டு வந்த மத்திய அரசு இப்போது திடீரென்று மது வணிகத்திற்கு ஆதரவாக சாலைகளின் பெயர்களை வகை மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவது நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற செயல் அல்ல என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றமே 'மது வணிகம் செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல' என்று 31.3.2017-ஆம் தேதியிட்ட தீர்ப்பில் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ள சூழ்நிலையில், மத்தியில் உள்ள பாஜக அரசும், மாநிலத்தில் உள்ள அரசும் சாலைகளை பெயர் மாற்றம் செய்து மது வணிகர்களை காப்பாற்ற நினைக்காமல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதுடன் நிறைவேற்றி சாலை விபத்துகளை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன் வர வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in