

அயனாவரத்தில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் 12-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது தாயார் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை அயனாவரம் முத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் கரிமா. இவரது மகன்கள் சதாம்(24). அமீன்(17). சதாம் சினிமா தியேட்டரில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கிறார். அமீன் அருகே உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணி யளவில் கரிமாவும், அமீனும் வீட்டில் இருந்தனர்.
அப்போது சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்தது. இதில் சமையல் அறையில் நின்று கொண் டிருந்த கரிமா மீது முதலில் தீ பிடித்தது.
அப்போது அவரை காப்பாற்றுவதற்காக அமீனும் சமையல் அறைக்குள் ஓடினார். இதில் அவர் மீதும் தீ பிடித்துக் கொண்டது. இருவரும் எரியும் தீயுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.
அருகே இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி இருவரின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலையில் அமீன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் கரிமாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.