

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். 20 கி.மீ. தூரத்துக்கு மனித சங்கிலி அமைத்து வரவேற்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. வரும் பொங்கலுக்கு நடக்குமா என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே தெரியும். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
திமுக சார்பில் இன்று காலை 11 மணிக்கு அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்றிரவு மதுரை வந்த ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
20 கி.மீ. மனித சங்கிலி
மதுரை புறவழிச்சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் புறப்படுகிறார். கடச்சனேந்தலிலிருந்து அலங்கா நல்லூர் வரை 20 கி.மீ. தூரத்துக்கும் வழி நெடுகிலும் மனித சங்கிலி அமைத்து ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இளைஞரணியினர் சீருடையில் பங்கேற்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதுரை உள்ளிட்ட 9 தென் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மதுரை மாநகர், புறநகர் மாவட்ட திமுகவினர் பங்கேற்கின்றனர்.
பல ஆயிரம் தொண்டர்களை திரட்டும் வகையில், கிராமங்கள்தோறும் வாகன வசதியை கட்சி நிர்வாகிகள் செய்து கொடுத்துள்ளனர்.
9-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி தேமுதிக சார்பில் வரும் 9-ம் தேதி மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், வாடிவாசல் அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இதில் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக, நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள், அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள் கிறேன்.