புதிதாக 90 மாலை நேர நீதிமன்றங்கள் -  தமிழ்நாடு முழுவதும் விரைவில் தொடங்க ஏற்பாடு

புதிதாக 90 மாலை நேர நீதிமன்றங்கள் - தமிழ்நாடு முழுவதும் விரைவில் தொடங்க ஏற்பாடு

Published on

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக 90 மாலை நேர நீதிமன்றங்களைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே மாலை நேர நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்துக்கு 3 வீதம் புதிதாக சுமார் 90 மாலை நேர நீதிமன்றங்களைத் தொடங்குவதற்கான அரசாணையை ஏற்கெனவே தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணைப்படி மாலை நேர நீதிமன்றங்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த மாலை நேர நீதிமன்றங்கள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படக்கூடும் என தெரிகிறது. இந்த மாலை நேர நீதிமன்றங்களில் பெரும்பாலும் ஓய்வுபெற்ற நீதித்துறை ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அண்மைக் காலத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் பட்டியல் மற்றும் மாலை நேர நீதிமன்றங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள நீதித்துறை ஊழியர்களின் பட்டியல் ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இதற்கு வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இது குறித்து தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.பரமசிவம் கூறியதாவது:

பெருகி வரும் மக்கள் தொகை, மக்களிடம் அதிகரித்து வரும் சட்ட விழிப்புணர்வு போன்ற காரணங்களால் நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. பழைய வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதாகக் கருதினால், அத்தகைய வழக்குகளை மட்டும் விரைவில் முடிப்பதற்காக 6 மாதங்களோ அல்லது ஓராண்டு காலமோ செயல்படக் கூடிய வகையில் தற்காலிக சிறப்பு விரைவு நீதிமன்றங்களைத் தொடங்கலாம்.

மாறாக, மாலை நேர நீதிமன்றங்களைத் தொடங்குவதன் மூலம் எவ்வித பயன்களும் கிடைக்காது. அடுத்த நாள் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்வது, தங்கள் கட்சிக்காரர்களை சந்திப்பது உள்ளிட்ட பணிகளை மாலை நேரங்களில்தான் வழக்கறிஞர்கள் மேற்கொண்டாக வேண்டும். இந்நிலையில் மாலை 6 மணிக்குப் பிறகு மாலை நேர நீதிமன்றங்கள் செயல்பட்டால், வழக்கறிஞர்களுக்கு பெரும் இடையூறாக அமையும். அதேபோல் சாட்சிகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவதும் பாதிக்கப்படும்.

ஆகவே, பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நீதிமன்றங்களைத் தொடங்குவது போன்றவற்றின் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in