

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி கொல்லப்பட்ட சம்பவத்தை தேசத்தின் அவமானமாகக் கருத வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கடந்த ஜன.14-ம் தேதி, அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார்.
இந்நிலையில், நந்தினி குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்ய ப்பட்ட நந்தினியைப் போன்று பல பெண்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். இன்றைக்கு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்ற நிலையை அரசு உருவாக்கிவிட்டது. நந்தினி கொல்லப்பட்ட சம்பவம் ஜாதி, மதத்தைத் தாண்டி சமூக அவலநிலையைக் காட்டுவதாக உள்ளது. இச்சம்பவத்தை தேசத்தின் அவமானமாகக் கருத வேண்டும். மேலும், கொலைக்குப் பின்னணியில் இருந்தவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக அரசியல் நிலை குறித்து சீமான் கூறியபோது, “தனக்கு முழு ஆதரவு உண்டு என்று கூறும் அதிமுக பொறுப்பு பொதுச் செயலாளர் சசிகலா, அதிமுக எம்.எல்.ஏ-க்களை சொகுசுப் பேருந்துகளில் வைத்து 3 நாட்களாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் ஜனநாயகமா?. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.
முன்னதாக, நந்தினியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் சீமான் அஞ்சலி செலுத்தினார்.