Published : 30 Jan 2017 09:00 AM
Last Updated : 30 Jan 2017 09:00 AM

சிராவயலில் களைகட்டிய மஞ்சுவிரட்டு: காளைகளை அடக்க முயன்ற 48 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சு விரட்டு நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் காளைகளை அடக்க முயன்ற 48 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்ட மக்களின் உணர்வுடன் கலந்தது சிராவயல் மஞ்சுவிரட்டு. இங்கு திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் 'சிராவயல் பொட்டல்' என்ற மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சு விரட்டு நடப்பதாகக் கூறப்படுகிறது.

மாட்டுத் தொழுவில் இருந்து அவிழ்க்கப்படும் காளைகள், நாலு கால் பாய்ச்சலில் பறப்பதும், மாடு பிடி வீரர்கள் காளைகளின் கழுத்தில் உள்ள துண்டுகளை அவிழ்ப்பதும் சாதனையாகக் கருதப்படும்.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு சிராவயலில் மஞ்சு விரட்டு நேற்று நடந்தது. இதற்காக காலை முதலே சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு கிராமத் தலைவர் வேலுச்சாமி அம்பலம் தலைமை வகித்தார். முதலில் கோயில் காளைக்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், வாடிவாசல் வழியாக 65 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பின்னர், பொட்டலில் ஆங் காங்கே 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. நாலாபுறமும் சீறிப்பாய்ந்த காளைகளை திமிலை பிடித்து அடக்க முயன்ற இளைஞர்களில் சுமார் 48 பேர் காயமடைந்தனர். அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மஞ்சுவிரட்டில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உட்பட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் கலந்து கொண்டன.

மஞ்சுவிரட்டை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, பெரி. செந்தில்நாதன் எம்.பி., திருப்பத்தூர் எம்எல்ஏ பெரியகருப்பன், ராமநாதபுரம் சரக டிஐஜி கபில்குமார் சரத்கர், காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். சிராவயலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x