

பெண் இன்ஜினீயர் படுகொலை தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் திங்கள் கிழமை ஆய்வு நடத்தி, தலைமுடி, கால் ரேகைகள், மது பாட்டில்கள் போன்ற தடயங்களை சேகரித்தனர்.
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்த பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி (23) கடந்த 13-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் அழுகிய நிலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள புதர் பகுதியில் 22-ம் தேதி மீட்கப்பட்டது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராமானுஜம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை 6 மணிக்கு சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், உமா மகேஸ்வரி உடல் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவில் கயிறு கட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சிபிசிஐடி கண்காணிப்பாளர் நாகஜோதி தலைமையில் வந்த அதிகாரிகள் 30 பேர், அந்தப் பகுதி முழுவதும் தீவிரமாக ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மகேஸ்வரியின் செருப்பு, அவரது உடல் கிடந்த இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் கிடந்தது.
அதை முதலில் கைப்பற்றினர். சுற்றுப்பகுதிகளில் கிடந்த 27 மது பாட்டில்கள், மது குடிக்க பயன்படுத்திய பிளாஸ்டிக் டம்ளர்கள், உமா மகேஸ்வரி உடல் கிடந்த இடத்தின் அருகில் இருந்து எடுக்கப்பட்ட 8 தலைமுடிகள், 6 கால் தடங்களின் ரேகைகள் போன்றவற்றை சேகரித்தனர்.
மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களில் இருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் அங்கேயே பதிவு செய்தனர். உமா மகேஸ்வரி காணாமல்போன தினத்தில் இருந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதை வைத்து முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டில் அவருக்கு வந்த செல்போன் அழைப்புகளின் விவரங்கள், உமா மகேஸ்வரியின் சொந்த ஊரில் அவருக்கு இருந்த பிரச்சினைகள், ஒருதலையாக காதலித்த மாணவர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.
பிரேத பரிசோதனையில் எடுக்கப்பட்ட உமா மகேஸ்வரியின் எலும்பு துண்டுகளும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப் படு கின்றன. கழுத்தில் ஒரு இடத்திலும் வயிற்றில் 4 இடங்களிலும் கத்திக்குத்து விழுந்து உமா மகேஸ்வரி இறந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந் துள்ளது.