

அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்திருப்பது தேச விரோதச் செயல். மத்திய அரசின் இம்முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நூறு சதவிகித நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுல்ல, செப்டம்பர் 2-ம் தேதி, தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் நடத்த உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்க அமைப்புகளை, தொழிலாளர்களை, அலட்சியப் படுத்திடும் விதமாக, மோடி தலைமையில் அமைச்சரவை கூடி நூறு சதவிகித அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது தேச விரோத செயலாகும், அரசின் இம்முடிவு கடும் கண்டனத்திற்குரியதாகும்.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை (ராணுவம்), உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு, தொலை தொடர்பு, கேபிள் நெட்ஒர்க், மொபைல் டி.வி, மருந்து, விமான போக்குவரத்து, தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு, திட்ட அலுவலங்கள், கால்நடை பராமரிப்பு (நாய்கள் வளர்ப்பு உட்பட) மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகிய துறைகளில் நூறு சதவிகித அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் அபாயகரமான முடிவை மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இவை மட்டுமின்றி, குறைந்தபட்சம் ரூ10 கோடிக்கு அன்னிய முதலீடு செய்கின்ற நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 20 ஆண்டுகளுக்கு குடியுரிமை தகுதி பெறுவார்கள். விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும் இங்கே சொத்துக்கள் வாங்கவும் குடும்பத்தினர் இங்கே வேலை பார்க்கவும் அனுமதி அளித்து அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
வியாபரத்திற்கு வந்த கிழக்கிந்தியக் கம்பெனி, பின் நாடே இங்கிலாந்து தேசத்திற்கு அடிமையானது.அவர்கள் வியாபாரத்திற்கு வலிய வந்தார்கள். ஆனால் இன்று மோடி அன்னிய தேச பெரு முதலாளிகளை வியாபாரம் செய்ய வாருங்கள், வாருங்கள் என இரு கைகளையும் விரித்து வரவேற்கின்றார்.
இதன் விளைவுகள் நாட்டிற்கு நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். நமது தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது மட்டுமின்றி, உற்பத்தியாகும். துப்பாக்கிகளும், தோட்டாக்களும், பீரங்கிகளும் யாருக்கு சென்றடையப் போகின்றது?
மருந்து, மீன், கால்நடை, தேனீ என அனைத்தும் நமது மக்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் அபாயமும் இதன் விளைவாக மக்களின் துன்ப துயரங்களை நாடு எதிர்கொள்ள உள்ள பேரபாயமாகும்.
நாட்டிற்கு எதிரான மத்திய அமைச்சரவையின் முடிவுகளை எதிர்த்து போராட அனைத்து ஜனநாயக சக்திகளும், தேசபக்தர்களும் ஓர் அணியில் அணி திரள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.