Published : 12 Apr 2016 12:39 PM
Last Updated : 12 Apr 2016 12:39 PM

விருத்தாச்சலத்தில் இருவர் இறந்தது எப்படி?- முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

விருத்தாச்சலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக தொண்டர்கள் இருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே இறந்ததாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கள்கிழமை) தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் விருத்தாசலம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் வெயிலில் மயங்கிய 2 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிதம்பரம் நகர 31-வது வார்டைச் சேர்ந்த எஸ்.கருணாகரன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது தேர்தல் நடத்தை, விதிமுறைகள் அமலில் இருப்பதால், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x