

அரசியல் பின்புலத்தில் இருப் பவர்களை செய்தித்துறையில் முதலில் கருணாநிதிதான் நியமித் தார் என அதிமுக மாநிலங்களவை எம்பி வேட்பாளர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடந்த 1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தனது தேர்தல் வெற்றிக்காக அரசு அலுவலரை பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, அவரது வெற்றி செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2016-ல் அதே குற்றத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா, செயல்படாதா என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் அறிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
கடந்த 1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அரசு அலுவலரை பயன்படுத்தியதால், அவர் வெற்றி பெற்றது செல்லாது என குஜராத் நீதிபதி ஜெகன் மோகன்லால் சின்ஹா தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பு தவறானதாகும். அந்த அரசு அலுவலர் தனது பதவியை ராஜினாமா செய்து, அதை அரசும் ஏற்றுக்கொண்ட பிறகே பணியாற்றினார். அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் உள்ள வீரர்களும் அரசு அலுவலர்கள்தான். அரசிடம் இருந்துதான் சம்பளம் பெறுகின் றனர். அப்படிப் பார்த்தால் அனை வரது வெற்றியையும் செல்லாது என அறிவிக்க வேண்டும். எனவே கருணாநிதியின் கருத்தை ஏற்க முடியாது.
அதுமட்டுமின்றி, அரசியல் பின்புலத்தில் இருப்பவர்களை செய்தித்துறையில் முதன் முதலில் நியமித்ததே கருணாநிதிதான். திருவாரூரில் இருந்து அதிகமான வர்கள் அவர் காலத்தில் நியமிக் கப்பட்டனர். கட்சிக்காரர்கள் பரிந்துரையின் பேரில் மாவட் டம்தோறும் பலரை நியமித்தார். அந்த நிலை இன்றும் தொடர்கிறது.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக இடை யிலான வாக்கு சதவீத வித்தி யாசம் 1 சதவீதம்தான் என கருணாநிதி கூறி வருகிறார். தேர்தல் வெற்றியை வாக்கு சதவீதம் நிர்ணயிப்பதில்லை. வெற்றி பெற்ற இடங்கள்தான் நிர்ணயிக்கும். கடந்த 1967-ம் ஆண்டு அண்ணா முதல்வரான போது திமுக 137 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு 40.6 சதவீத வாக்குகள் கிடைத்தன.
அதேநேரத்தில் 49 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸுக்கு 42.6 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததால் கருணாநிதி இதுபோன்று பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.