

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இரவில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற் றது.
இந்நிலையில், திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந் தது. மதுரை கீழமாசி வீதி யிலுள்ள தேரடி நிலையில் நேற்று அதிகாலை இதற்கான ஏற்பாடு கள் நடைபெற்றன. தேரடி கருப்பண சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து பூக்கள், புதிய துணிகளால் 2 தேர்களும் அலங் கரிக்கப்பட்டன. பெரிய தேரில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பிரியா விடையுடன் எழுந்தருளினர்.
இத்தேர் காலை 6.05 மணியள வில் இருப்பிடத்தில் இருந்து புறப் பட தயாரானது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார், மாவட்ட ஆட்சியர் வீரராக வராவ், மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
இதன்பின்னர், மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேர் 6.40 மணிக்கு நிலையிடத்தில் இருந்து புறப்பட்டது. 2 தேர்களும் ஒன்றன் பின், ஒன்றாக மாசி வீதிகளில் சென்றன. பெரிய தேர் 12 மணிக் கும், சிறிய தேர் 12.15 மணிக்கும் மீண்டும் தேரடி நிலையை அடைந் தன.
நேற்று முன்தினம் திருக்கல் யாண நிகழ்ச்சியை காண வர முடி யாத உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரண்டதால் மாசி வீதிகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. வழிநெடுங்கிலும் தீபாராதனைகள் ஏந்தி சுவாமியை வழிபட்டனர். வர்த்தகர்கள் பக்தர்களுக்கு இலவச பிரசாதம், நீர், மோர், விசிறிகளை வழங்கினர். 2 தேர்களுக்கும் முன்னும், பின்னும் போலீஸ், தீயணைப்பு வாகனங்கள் சென்றன. இரவு 4 மாசி வீதிகளில் தேர்த்தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அழகர் நாளை ஆற்றில் இறங்குகிறார்
சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நாளை நடக்கிறது. இதற் காக அழகர்கோவில் மலையில் இருந்து பக்தர்கள் புடைசூழ புறப்பட்ட கள்ளழகருக்கு மூன்று மாவடியில் இன்று எதிர்சேவை நடைபெறுகிறது. அழகர்கோவில் சார்பில் சித்திரை விழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. அழகர் கோவிலில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட சுவாமி கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து சர்வ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கோலத்துக்கு மாறினார்.
மதுரைக்குப் புறப்பட்ட கள்ளழகருக்கு அழகர்கோவில் நுழைவுவாயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் முன் விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து இரவு 7 மணியளவில் மேளதாளம், அதிர்வேட்டுகள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் மதுரையை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.
எதிர்சேவை
அப்போது பக்தர்கள் கரகோஷங் களை எழுப்பி வழி அனுப்பினர். கள்ளந்திரி, அப்பன்திருப்பதி என வழிநெடுக அமைக்கப்பட்டிருந்த மண்டபங்களில் கள்ளழகர் காட்சி யளித்தவாறு வந்தார். நள்ளிரவில் கடச்சனேந்தல் வந்த கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் மதுரை நோக்கி அழைத்து வந்தனர். அதிகாலையில் மூன்று மாவடி வந்தடைந்தார். அங்கு விடிய,விடிய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர் கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடைபெற்றது.