

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவ தாக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித் துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, நாள்தோறும் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மூன்றாம் நாளான நேற்று காலை நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மதுரை மாநகர், புறநகர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளைச் சந்தித்தார்.
ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோ சனை கூட்டத்துக்கு காலை 11 மணிக்கு சசிகலா வந்தார். அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்ட அமைச்சர்கள், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, செங்கோட்டையன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஒரு மணி நேரத்தில் கூட்டம் முடிந்ததும் 12 மணிக்கு சசிகலா புறப்பட்டுச் சென்றார். கூட் டத்தின்போது, அந்தந்த மாவட்டங் களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக கட்சியினரிடம் கேட் டறிந்து, சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2 கூட்டங்களில் நிர்வாகி களுக்கு அளித்த ஆலோசனை களையே தற்போது எங்களிடமும் தெரிவித்தார். மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை கேட் டறிந்து அதற்கேற்ற ஆலோசனை களும் வழங்கினார். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான எதிர்பார்ப்பு உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்து வதற்கான முயற்சிகள் எடுக்கப் பட்டு வருவதாக தெரிவித்தார்.
டெல்டா மாவட்ட நிர்வாகிகளிடம், ‘விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவற்றின் அடிப்படையில் உதவி செய்யுங்கள். உங்களுக்கு தேவை யானவற்றை நான் செய்கிறேன். எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடாதீர்கள்’ என்று அறிவுரை வழங்கினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேனில் வந்த தொண்டர்கள்
அதிமுக அலுவலகத்தில் முதல்நாள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் கூட்டம் குறைந்து விட்டது. இந்நிலையில், நேற்று சசிகலாவை வரவேற்க காஞ்சி புரம் மாவட்டம் மற்றும் வட சென்னையைச் சேர்ந்த ஆண் களும் பெண்களும் வேன், சரக்கு வாகனங்களில் அழைத்துவரப்பட் டிருந்தனர். இவர்களில் சசிகலா வந்தபோது வரவேற்க ஒரு குழுவும், அவர் செல்லும்போது வழியனுப்ப ஒரு குழுவும் அனுமதிக்கப்பட்டனர்.