Published : 05 Jun 2017 06:11 PM
Last Updated : 05 Jun 2017 06:11 PM

3 மணிநேரத்தில் 4 பேரை கொன்ற ஆண் யானை காட்டிலிருந்து திரும்ப வந்து விட்டதா?- பீதியில் உறையும் கோவை

3 மணி நேரத்தில் 4 பேரை கொன்ற ஆண் யானை பிடிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டதை தொடர்ந்து கோவை மாநகரில் மற்றுமொரு ஆண் யானை வீடுகளின் சுற்றுச்சுவரை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பாதிக்கப்பட்ட பகுதிவாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

கோவை மாநகரில் மாநகராட்சி எல்லைக்குட்பட்டது சுந்தராபுரம் கணேசபுரம் மற்றும் வெள்ளலூர். கடந்த வெள்ளியன்று நள்ளிரவு 3 மணிக்கு கணேசபுரம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஓர் ஆண் யானை ஒரு வீட்டின் முன் படுத்திருந்த காயத்ரி என்ற 12 வயது சிறுமியை மிதித்துக் கொன்றது. அச்சிறுமிக்கு அருகே படுத்திருந்த அவள் தந்தையையும், அதற்கு அப்பால் கட்டிலில் படுத்திருந்த அவள் தாயையும் தந்தத்தால் மாறி, மாறி தூக்கி வீசியது.

இதில் இருவரும் 20 மற்றும் 30 அடி தூரத்தில் விழுந்து எழுந்து யானைக்கிடையில் போராடி மேலும் தம் குழந்தைகள் இருவரை மீட்டனர். அரைமணிநேரம் அழிச்சாட்டியம் செய்த அந்த யானை அங்குள்ள பள்ளத்தில் இறங்கி ஓடத்தொடங்கி, 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளலூர் குப்பன் தோட்டத்தில் புகுந்தது. அங்கு இயற்கை உபாதை கழிக்க வந்த நாகரத்தினம், ஜோதிமணி ஆகிய இரு பெண்களை யானை தாக்கியதில் அவர்களும் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து வெள்ளானப்பாளையம் என்ற இடத்தில் தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச வந்த பழனிசாமி என்பவரை மிதித்துக் கொன்றது. இங்கிருந்து 100 அடி தூரத்தில் யானை அவருடைய தோட்டத்திலேயே மறைவாகத் தங்கியிருந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர், 7 வனத்துறை அலுவலர்கள், ஆயுதம் தாங்கிய கலவரத் தடுப்பு போலீஸார் ஆகியோர் அங்கு திரண்டனர். நள்ளிரவு 3 மணி முதல் காலை 5 மணிக்குள் நடந்த இந்த சம்பவங்களின் நடுவே யானை துரத்தி ஓடியதில் 5 பேருக்கு மேல் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

யானை மிதித்ததில் முதலாவதாக இறந்த காயத்ரியின் தந்தைக்கு வலது கை உடைந்தது. தாய்க்கு தொடையில் யானைத்தந்தம் குத்திக்கிழித்ததில் படுகாயம் ஏற்பட்டது. இவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து காட்டு யானையைப் பிடிக்க பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அசோகன் ஆகியோரும் வந்தனர். மயக்க ஊசி செலுத்தும் வனச்சரகர்கள் மூவர் சுமார் 12.30 மணிக்கு மயக்க ஊசியைச் செலுத்தினர்.

3 மணிக்கு லாரியில் ஏற்றி டாப்ஸ்லிப் வனப்பகுதிக்கு கொண்டு சென்று அதை விடுவித்தனர். கேரள- தமிழக எல்லைப்பகுதியாக மதுக்கரை மலைகள் உள்ள பகுதியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நகருக்குள் வந்து மக்களை தாக்கியதால் பயத்தில் உறைந்திருந்த இப்பகுதி மக்கள் யானை பிடிபட்டதில் ஆசுவாசப்பட்டனர்.

இந்த குறிப்பிட்ட யானை இதற்கு முன்பே 2 வார காலமாக மதுக்கரை, கோவைபுதூர், சுண்டக்காமுத்தூர், பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. பலரை தாக்கியும் உள்ளது. அதை விரட்டும்போது வனத்துறையினர் இருவரையும் தாக்க முயற்சிக்க அவர்களும் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இப்படியிருக்க, 'இதை உடனே கண்காணித்து காட்டுக்குள் விரட்டியிருந்தாலோ, மயக்க ஊசி போட்டு வனத்துறை முகாம் கராலில் அடைத்திருந்தாலோ அநியாயமாய் 4 உயிர்களை இழந்திருக்க வேண்டியதில்லை!' என்ற புகார்களை கிளப்பிக் கொண்டிருந்தனர் மக்கள்.

(ஆண்யானை சேதப்படுத்திய வாழை மரங்கள்)

இதற்கிடையே இப்படி 4 பேரை ஒரே சமயத்தில் கொன்ற யானையை பிடித்து கராலில் அடைக்காமல் காட்டுக்குள் விட்டிருக்கிறார்களே. கோவை மதுக்கரைக்கும், ஆனைமலை வனப்பகுதியில் உள்ள டாப்ஸ்லிப்பிற்கும் சுமார் 70 கிலோமீட்டர் தூரம்தான். கேரளத்திலிருந்து ஒரிசா வரை வலசை போகும் காட்டு யானைக்கு இந்த தூரமெல்லாம் எம் மாத்திரம்? திரும்ப அது கோவை மாநகருக்குள்ளே வராது என்பது என்ன நிச்சயம்? என்றெல்லாம் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருந்தனர் இயற்கை ஆர்வலர்கள்.

இந்த நிலையில்தான் நேற்றும் இதேபோன்ற ஓர் ஆண் யானை அதே மதுக்கரை மலைகளிலிருந்து புறப்பட்டது. இது இரவு 11 மணிக்கு கோவை மாநகரின் தென்மேற்கு எல்லையான கோவை புதூர் பிரஸ் என்கிளேவ் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இங்கு போடப்பட்டுள்ள கல் கால் கம்பி வேலிகளை உடைத்து விட்டு ஒரு வீட்டின் காம்பவுண்ட் கேட்டை பிடித்து உலுக்கியது. அங்கிருந்த மாமரத்தை பிடுங்கி சாப்பிட்டது.

பிறகு அங்கிருந்து அந்த வீட்டின் பின்பக்கமாய் சென்று வளர்ந்த தென்னை மரம் ஒன்றை உலுக்கிப் பார்த்தது. வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு தொலைபேசியில் தகவல் சொல்ல தொடர்ந்து தகவல்கள் காவல்துறைக்கும், வனத்துறையினருக்கும் பறக்க, அதற்குள் 4 வீடுகளின் சுற்றுச்சுவரை தட்டிப்பார்த்து விட்டு அங்குள்ள மாநகராட்சிப் பூங்காவில் புகுந்தது. அதை விரட்ட வந்த போலீஸார் இது எங்கள் பணியல்ல; வனத்துறையினர் வந்து கவனித்துக் கொள்வார்கள் என்று ஜீப்பில் பறந்து விட்டனர்.

அதைத்தொடர்ந்து வெகுநேரம் கழித்து வந்த வனத்துறையினர் மூன்று ஜீப்புகளில் யானை விரட்டும் பணியை தொடர, அது அங்கிருந்த புதருக்குள் புகுந்து மறைந்து கொண்டது. அதைத் தொடர்ந்து இங்கிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள பச்சாப்பள்ளி என்ற குடியிருப்பு அருகே ஓடும் பள்ளத்தில் வெளிப்பட்ட யானை அங்கிருந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு புகுந்தது. அங்கிருந்த நாய் குரைக்க, அதை விரட்டிய யானை சுற்றிலும் இருந்த வாழை, மாமரங்களை கபளீகரம் செய்தது.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் இங்கேயே யானை இருக்க, இந்த வீட்டின் மூன்று பகுதிகளிலும் வனத்துறையினரின் வேன்கள் முற்றுகையிட்டு சியர்ச் லைட்டுகளின் ஒளியைப் பாய்ச்ச அதில் மிரண்ட யானை எகிறிக்குதித்து ஓட, அதைப் பார்த்து அந்த வீட்டின் நாய் குரைத்துக் கொண்டே அங்கு போர்டிகோவில் நின்றிருந்த காருக்கு அடியில் பதுங்கியது. அதைப் பார்த்த யானை கோபமடைந்து அந்த காரையே தன் கொம்புகளால் முட்டித் தள்ளியது. (இதுவெல்லாம் அந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது) அதில் கார் 10 அடி தூரம் எறியப்பட்டு மரத்தில் மோதி நின்றது. கார் கண்ணாடி கதவுகள் உடைந்து நொறுங்கின.

அத்துடன் நிற்கவில்லை யானை. அடுத்ததாக அருகில் இன்னொரு வீட்டு காம்பவுண்ட் வேலியையும், வாயிற்கதவையும் உடைத்தது. அங்கிருந்த மாமரம், வாழைமரங்களை சாப்பிட்டது. அங்குள்ள கம்பிவேலி சிமெண்ட் தூண்களை இடித்து தள்ளிவிட்டு வனத்துறையினர் துரத்தியதில் ஒரு பக்கமாக ஓடியது. அப்போது எதிரில் வந்த ஒரு வனத்துறையினரின் வேனில் மோதி அதை கொம்புகளால் குத்தி தூக்கியது. அதில் வனத்துறையினர் குலைநடுங்கிட, அதே சமயம் அந்த வேனுக்கு பின்புறம் நின்றிருந்த ஜீப்பிலிருந்து பட்டாசுகளை கொளுத்திப் போட்டனர் வனத்துறையினர்.

எனவே கொம்புகளால் தூக்கிய வேனை விட்டு விட்டு வேறு திசையில் ஓட்டம் பிடித்தது. இப்படியெல்லாம் போக்கு காட்டிய யானை திரும்ப பிரஸ் என்கிளேவ் பின்பகுதிக்கு ஓடியது. அங்கிருந்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட முயற்சித்தபோது அங்கே உருவாகி வரும் புதியதொரு குடியிருப்பு காம்பவுண்டின் சுவர்களை இடித்து தள்ளிவிட்டு மீண்டும் பிரஸ் என்கிளேவ் இன்னொரு பகுதிக்குள் இருந்த கல்கால் கம்பிவேலிகளை முட்டித் தள்ளிவிட்டு வந்த வழியே திரும்ப ஓடி அங்குள்ள வாழைத்தோப்புக்குள் புகுந்து கொண்டது.

இந்த சம்பவம் நடக்கும்போது திங்கட்கிழமை காலை 6 மணி. தொடர்ந்து அந்த யானையை மேற்கில் உள்ள பள்ளத்தில் இறங்கி மலைக்காடுகளுக்குள் புகுந்து கொண்டது. இந்த திகிலுாட்டும் சம்பவத்தால் இந்த பகுதிவாசிகள் நேற்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்தனர். 'இந்த யானை இன்று இரவும் வரும்.நிச்சயம் இதை விட அழிச்சாட்டியம் செய்யும். உடனே இதை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடாவிட்டால் இங்கே யாருமே குடியிருக்க முடியாது!' என அச்சத்துடன் வேண்டுகோள் வைக்கின்றனர் இதனால் பாதிக்கப்பட்டோர்.

இதே விஷயத்தை இன்னொரு சாரார், 'இது வெள்ளிக்கிழமை 4 பேரை அடித்துக் கொன்ற யானையா? காட்டுக்குள் விடப்பட்டது திரும்பி வந்துவிட்டதா? அப்படி இருந்தால் பெரும் ஆபத்து!' என்றும் சர்ச்சை கிளப்புகின்றனர்.

'டாப்ஸ்லிப்பில் பிடிபட்ட யானை வேறு. இது வேறு. பிடிபட்டதற்கு கொம்புகள் சிறியது. வயதும் குறைவு. உயரமும் குறைவு. ஆனால் இந்த யானையின் கொம்பும், உருவமும், உயரமும் மிகப்பெரிது!' என்கின்றனர்.

'அது வேறு; இது வேறு என்றிருந்தாலும் சரி, இதுதான் அதுவாகவே இருந்தாலும் சரி எப்படியாவது இதைப் பிடித்து எங்கள் பீதியை போக்குங்கள்!' என்கின்றனர் மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x