Published : 15 Dec 2013 03:38 PM
Last Updated : 15 Dec 2013 03:38 PM

மாணவர்கள் மோதலை தடுக்க அரசுக்கு ராமதாஸ் யோசனை

கல்லூர் மாணவர்கள் மோதலை முற்றிலும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் கடந்த வியாழக்கிழமையன்று இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாநகரப் பேரூந்தில் மோதிக் கொண்டதில் 3 மாணவர்கள் மட்டுமின்றி, பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

அதேநாளில் வேறு இரு கல்லூரிகளின் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளார். படித்து பட்டம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய மாணவர்கள், இதுபோன்ற வீண்மோதல்களில் ஈடுபட்டு, வழக்குகளில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து, குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்துவது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

சென்னையில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் கல்லூரியிலும், இரு அரசு கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் தான் அடிக்கடி இத்தகைய மோதல்களில் ஈடுபடுகின்றனர். இம்மாணவர்கள் பயிலும் மூன்று கல்லூரிகளும் ஒரு காலத்தில் சிறந்த அறிஞர்களையும், அரசியல் தலைவர்களையும், உருவாக்கிய பெருமைக்குரியவை.

அத்தகைய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கத்திகளை ஏந்தி வலம் வருவதும், அற்ப காரணங்களுக்காக மோதலில் ஈடுபடுவதும் சரியா? என்பதை சம்பந்தப் பட்டவர்களே ஆத்ம பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சென்னையில் தனியார் கல்லூரிகளும், அரசு உதவி பெறும் கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன.

அவற்றில் பயிலும் மாணவர்கள் இத்தகைய மோதல்களில் ஈடுபடாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நிலையில், அரசுக் கல்லூரிகளில் மட்டும் மோதல்கள் ஏற்படுகிற தென்றால், அதற்கு மாணவர்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

சமூக விரோத செயல்களை ஊக்குவிப்பதை மட்டுமே வழக்கமாக கொண்ட சில அமைப்புகளும், இயக்கங்களும் மாணவர்களை தவறாக வழி நடத்துவது, அரசுக் கல்லூரிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில சக்திகள் முயல்வது போன்றவை கண்ணுக்குத் தெரியாத காரணங்களில் சிலவாக இருக்கக் கூடும்.

குறிப்பாக தென்மாவட்ட தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் கல்லூரி முதல்வரையே கொல்லும் அளவுக்கு மாணவர்கள் சிலர் சீரழிந்திருக்கின்றனர். எதிர்காலத் தலைமுறையை சீரழிக்கும் இத்தகைய மோதல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது; அதற்கான கடமை அரசுக்கு மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

எனவே, கல்லூரி மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? மாணவர்களின் திறனை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வளாக நேர்காணல்களை நடத்த செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்தெல்லாம் பரிந்துரைக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், உளவியல் வல்லுனர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்தி மாணவச் செல்வங்களை நல்வழிப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x