

கல்வி நிலையங்கள் அருகே கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவ டிக்கை குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு டீக்கடையில் அதிகமானோர் சிகரெட் பிடிப்பதாகவும், பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்ற சட்டத்தை சரியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘கலையரங்குகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிகரெட் பிடிக்க தடை விதித்தும், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் வழக்கு பதியவும் கடந்த ஜூன் 13-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஏற்கெனவே கல்வி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவ டிக்கைகள் என்ன என்பதை அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும்.
புகையிலை மட்டுமின்றி கல்வி நிலையங்களின் அருகே போதை தரும் கஞ்சா சாக்லேட் விற்பனை அளவுக்கு அதிகமாக உள்ளதாகவும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப் பதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருட்களையும் கல்வி நிலையங்கள் அருகே விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது. நீதிமன்றம் என்னதான் உத்தரவிட்டாலும் ஒருசில நாட்கள் மட்டுமே அந்த உத்தரவு செயல் பாட்டில் உள்ளது. இது வருத்தம் அளிக்கிறது.
பல கல்லூரிகளுக்கு உள்ளேயும் போதைப்பொருட்களின் நடமாட்டம் உள்ளது. போலீஸார் கல்லூரிக ளுக்குள் சென்று ஆய்வு நடத்தி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? கல்வி நிலையங்கள் அருகே போதை சாக்லெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை நிரந்த ரமாக தடுப்பதற்கு அரசு என்ன தீர்வு வைத்துள்ளது என்பது குறித்தும், சட்டவிரோதமாக இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்பவர் கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு பதில் மனுவாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.