Published : 20 Feb 2014 11:30 AM
Last Updated : 20 Feb 2014 11:30 AM

கச்சத்தீவில் மார்ச் 15-ல் புனித அந்தோனியார் திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவி மார்ச் 15 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி இரண்டு தினங்கள் நடைபெற உள்ளன.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா தமிழகம் - இலங்கை பக்தர்கள் பாரம்பரியமாக பல ஆண்டு காலமாக கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக பல ஆண்டுகள் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா நடைபெறாமல் இருந்தது. பின்னர் 2010ம் ஆண்டு முதல், இந்திய-இலங்கை அரசுகளின் அனுமதியுடன் நடந்து வருகிறது.

இதுகுறித்து தமிழகத்திலிருந்து கச்சத்தீவு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் ராமேஸ்வரம் பங்குத்தந்தை சகாயராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2014–ம் ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் மாதம் 15, 16 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளன. மார்ச் 15 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. அதன் பின்னர் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். மேலும் முதல்நாள் இரவு தேர்ப்பவனி நடைபெறும். இரண்டாம் நாளான மார்ச் 16ஆம் தேதி காலையில் பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்று பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

கச்சத்தீவு திருவிழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் செல்ல படகுகள் ஏற்பாடுகள் செய்யப்படும் ஒவ்வொரு படகிலும் 30 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். படகுகளில் பக்தர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படும், என்றார்.

மேலும், பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 800 மட்டும் பயணத் தொகையாக வசூலிக்கப்படும். இரண்டு பாஸ்போர்ட் அளவுப் புகைப்படங்களுடன், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நகலை இணைத்து முகவரியை விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து தரவேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தர கடைசி நாள் மார்ச் 5 ஆகும்.

திருவிழாவில் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் வசதிகள் ஆகியன கச்சத்தீவில் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை நெடுந்தீவு மறைமாவட்ட ஆயர் தாமல் சௌந்தரநாயகம் செய்து வருகின்றார்.

மேலும் கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து செல்ல பத்திரிக்கையாளர்கள் செல்ல இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது எனவும், மேலும் செல்ல விருப்பமுள்ளவர்கள் விசா பெற்று செல்லவோ அல்லது பக்தர்களாகவோ செல்லாம் என்றும் அருட்தந்தை சகாயராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x