Published : 13 Jun 2017 08:06 AM
Last Updated : 13 Jun 2017 08:06 AM

சென்னையில் அடுத்த 6 மாதங்களில் பேட்டரியில் இயங்கும் பேருந்து ஓடும்: 50 சதவீதம் எரிபொருள் செலவு குறையும் என கணிப்பு

சென்னையில் அடுத்த 6 மாதங்களில் பேட்டரி மூலம் ஓடும் பஸ்கள் இயக்கப்படும். இதனால், எரிபொருள் செலவை 50 சதவீதம் குறைக்க முடியும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது சாதாரண, சொகுசு, ஏசி என பல வகையான பஸ்கள் இயக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் பேட்டரி மூலம் ஓடும் பேட்டரி பஸ்களை சென்னையில் இயக்க, தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அசோக் லேலண்டு நிறுவனத்தின் பேட்டரி பஸ்ஸில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மலைப் பகுதியில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பேட்டரி பஸ்ஸில் ஆய்வு நடத்தி னோம். இதில், மொத்தம் 31 சொகுசு இருக்கைகள், 2 சிசிடிவி கேமராக்கள், தீயணைப்பு கருவி கள், ஜிபிஎஸ், தானியங்கி கதவு, அவசரகால வழி, முதலுதவிப் பெட்டி, ஓட்டுநருக்கு வழித்தடம் காட்டும் கணினி திரை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இந்த முதல் கட்ட சோதனை ஓட்டம் திருப்தி யாகவே இருந்தது.

இருப்பினும், சென்னையில் இயக்கும் வகையில் பஸ்ஸில் இருக்கை வசதி உள்ளிட்டவற்றை மாற்றியமைக்க நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேட்டரி பஸ்கள் ஓட்டுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப் படுவதோடு எரிபொருள் செலவும் குறையும். ஆனால், இது டீசல் பஸ்ஸை விட விலை அதிகமாக இருக்கும். அடுத்த 6 மாதங்களில் சென்னையில் பேட்டரி பஸ் ஓடும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அசோக் லேலண்டு நிறுவன உதவிப் பொது மேலாளர் கே.சுரேஷி டம் கேட்டபோது, ‘‘பேட்டரி பஸ் சோதனை ஓட்டத்தின் போது அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், சில மாற்றங்களை செய்ய வேண்டு மென அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நாங்கள் ஆலோசிக்க உள்ளோம். இந்த பஸ்ஸில் 3 தொகுப்பு பேட்டரிகள் உள்ளன.

ஒவ்வொரு தொகுப்பிலும் மொத் தம் 26 பேட்டரிகள் இருக்கும். ஒரு தொகுப்பு பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை பயணம் செய்யலாம். 3 தொகுப்பையும் சார்ஜ் செய்தால் 150 கி.மீ வரையில் பயணம் செய்ய முடியும். இந்த தூரத்துக்கு டீசல் வாகனத்தைப் பயன்படுத்தினால் சுமார் 40 லிட்டர் டீசல் தேவைப்படும். எனவே, பேட்டரி பஸ்களால் 40 முதல் 50 சதவீதம் வரையில் எரிபொருள் செலவைக் குறைக்க முடியும்’’ என்றார்.

புதிய தொழில்நுட்பம் அவசியம்

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘கடந்த 1989-ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் போர் நடந்தபோது எண்ணெய் பற்றாக்குறையால் நம் நாட்டில் பல்வேறு இடங்களில் பஸ் சேவை கணிசமாக குறைக்கப்பட்டது. அப்போது, சென்னையில் முதல் முறையாக பேட்டரி மூலம் ஓடும் 2 பஸ்கள் தாம்பரம் பிராட்வே இடையே இயக்கப்பட்டன. அவை நன்றாகவே இருந்தன. ஆனால், வேகமாக ஓட்டுவதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே, இது போன்ற பிரச்சினைகள் இல்லாமல் இருக்க தொழில்நுட்ப வசதியை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, பேட்டரி பஸ்ஸின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பதிந்து தேவையான மின்சாரத்தை உற் பத்தி செய்யலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x