

ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி படித்த பெண் குழந்தைகள் 65 பேர் நேற்று திடீரென வெளியேற்றப் பட்டதால் அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெட்ட வெளியில் பள்ளிக்கு செல்லாமல் தவித்தனர்.
மதுரை கே.கே.நகரில் காந்தி அருங்காட்சியக சாலையில் சத்யா அம்மையார் நினைவு அரசு ஆதர வற்றோர் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகம், 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டது. தற்போது சமூக பாதுகாப்புத் துறை சார்பில் பராமரிக்கப்படுகிறது. இந்த இல்லத்துக்கு தனி கட்டிட வசதி இல்லை.
1982-ல் இருந்து இங்குள்ள மாநகராட்சி கட்டிடத்தில் இந்தக் காப்பகம் செயல்படுகிறது. இந்தக் காப்பகத்தில் ஆதரவற்ற அல்லது தாய், தந்தையை இழந்த மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் 117 பெண் குழந்தைகள் தங்கி பல்வேறு பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த காப்பகத்தில் 24 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒரு கண்காணிப்பாளர், 2 ஆசிரியர்கள், ஒரு கணக்காளர், ஒரு சமையலர், 4 உதவியாளர்கள், 2 துப்புரவு பணியாளர்கள் உட்பட 11 பேர் மட்டும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. விடுதியில் திடீரென்று ‘‘35 பேர் மட்டும் தங்கி படிக்க வசதியிருக்கிறது, மற்ற குழந்தைகள் தங்க முடியாது, ’’ என்று கண்காணிப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால், 35 குழந்தைகள் தவிர, நேற்று காப்பகத்துக்கு வந்த 65 குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை விடுதிக்குள் அனுமதிக் காததால் பள்ளிகளுக்கு செல் லாமல் விடுதியில் வெளியே மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந் தனர். தகவல் அறிந்த குழந்தை களின் உறவினர்கள் அங்கு திரண்டனர். குழந்தைகளுக்கு ஆதரவாக பெண் சமூக ஆர்வ லர்களும் அங்கு வந்தனர்.
அவர்கள், ‘‘117 குழந்தைகள் தங்கி படித்த நிலையில் அவர்கள் நிரந்தரமாக இங்கு தங்கி படிக்க கட்டிட வசதிகளை ஏற்படுத்தாமல் அவர்களை வெளியேற்றுவது எந்த விதத்தில் நியாயம் ’’ என்று காப்பக கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விடுதி அதிகாரியிடம் கேட்டபோது, விடுதியில் 40 சதுர அடிக்கு ஒரு குழந்தைதான் தங்கியிருக்க வேண்டும் என எங்களுக்கு கண்டிப்பான உத்தர விடப்பட்டுள்ளது. இளம்சிறார் நீதி சட்டமும் அதுதான். அதன்படி தற்போது காப்பகத்தில் 35 குழந்தைகள் மட்டுமே தங்கி படிக்க முடியும் என்பதால் மற்ற குழந்தை களை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் ’’ என்றனர்.
ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை
சத்யா நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் வெளியேற்றப்பட்ட விவகாரம் ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர், சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், குழந்தைகளின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அந்த இல்லத்தில் 35 குழந்தைகள்தான் தற்போதைக்கு தங்கி படிக்க முடியும், மீதி குழந்தைகளை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யப்படும்.
அதனால், நாளை (இன்று) எல்லா குழந்தைகளையும், அவர்களுடைய ஆவணங்களுடன் அழைத்து வரும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இல்லத்தில் தங்கி படிக்கும் குழந்தைகளை மற்ற விடுதிகளுக்கு மாற்றும்பட்சத்தில் அவர்கள் படிக்கும் பள்ளிகளையும் சேர்த்து மாற்ற வேண்டியிருக்கும். அப்படி மாற்றினால் 10, பிளஸ் 2 படிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் இந்த விவகாரத்தில் ஆட்சியர் குழந்தைகளுக்கு பாதகமில்லாத முடிவு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.