Published : 01 Jun 2016 06:18 PM
Last Updated : 01 Jun 2016 06:18 PM

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு ஒப்புதல்

மத்திய அரசு ரூ.713 கோடி நிதி ஒதுக்கீடு



*

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூ.713 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ரூ.916 கோடி, கடன்வசதி மூலம் 2,141 கோடி பெற்று பணிகளை தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் 2 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 24 கி.மீ. தொலைவுக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ. தொலைவுக்கு 2-வது பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இரு வழித்தடத்திலும் சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில், முதல்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, வண்ணாரப்பேட்டை யில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பாதையை விரிவுபடுத்த ஆய்வு நடத்தி மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மத்திய அரசுடன் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு சார்பில் ரூ.713 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து ரூ.916 கோடியும், கடன்வசதி மூலம் 2,141 கோடி திரட்டவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சுரங்கப் பணிக்கு டெண்டர்

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையான 9 கி.மீ. தொலைவு விரிவாக்கத்தில் மொத்தம் 8 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. வண்ணாரப்பேட்டையில் இருந்து 2 கி.மீ. சுரங்கப்பாதையில் இயக்கப்பட உள்ளது. சுரங்கப் பணிகளை முடிக்க கூடுதல் காலம் தேவைப்படும். எனவே, சுரங்கப் பணிகளுக்கு மட்டும் முன்கூட்டியே டெண்டர் கோரப்பட்டு அப்கான்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் கூறியதாவது:

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு முழுமையான திட்ட அறிக்கை தயாரித்தோம். திட்ட மதிப்பு ரூ.3,770 கோடியாகும். இதில் மத்திய, மாநில அரசின் நிதியுடன் 60 சதவீத தொகையை ஜப்பான் நிதி நிறுவனத்திடம் பெற திட்டமிட்டோம். தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், மத்திய அரசு ஒப்புதல் பெறவும், நிதி ஒதுக்கீடு பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்து ரூ.713 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, மாநில அரசு மற்றும் ஜப்பான் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று திட்டப்பணிகளை தொடங்க உள்ளோம்.

சுரங்கப்பாதை பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்கான்ஸ் நிறுவனத் துக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட்டு வேலையை தொடங்கவுள் ளோம். மீதமுள்ள 7 கி.மீ. தொலைவுக்கு விரைவில் டெண்டர் வெளியிடப்படும். விரிவாக்கப் பணிகளை 2018-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்குவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினரும், ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்னாமிக்ஸ் சர்வீஸ் (ரைட்ஸ்) தரப்பினரும் ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்தப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அடுத்தகட்டமாக இந்த 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் பெற மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x