Published : 18 Apr 2017 12:51 PM
Last Updated : 18 Apr 2017 12:51 PM

ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற பேருந்து நிலையத்தின் அவலம்: ஒதுங்கக்கூட இடமில்லாத மாட்டுத்தாவணி - பயணிகள் திண்டாட்டம்

மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளது. ஆனால், இங்கு முழுக்க முழுக்க கட்டண கழிப்பறைகள் மட்டுமே செயல்படுகின்றன. பயணிகளின் அடிப்படை உரிமையான இலவச கழிப்பறை இல்லாததால், திறந்தவெளியை பலர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள பஸ்நிலையங்களில் திரும்பிய பக்கமெல்லாம், “அங்கிள், முன்னேற்றங்கற பேர்ல புது ஃபிரிட்ஜ், ஆனா வெளியில மலம் கழிக்கப் பழைய பழக்கமா?” என சிறுவன் ஒருவன் கேலியாக கேட்பது போன்ற படத்துடன் காணப்படும் சுவரொட்டி, பயணிகள் அனைவரையும் ஒரு நிமிடம் நின்று பார்க்கத் தூண்டுகிறது. மாநகராட்சியின் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இந்நடவடிக்கை பாராட்டுக்குரியதுதான், அதேசமயம் தூய்மையை கடைப்பிடிக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி உருவாக்கி வைத்துள்ளதா? என கேள்வியெழுப்புகின்றனர் பயணிகள்.

முன்னேற்றம் என்பது பிரம்மாண்டமான பஸ்நிலையம், விசாலமான சாலை, பெரிய அளவிலான கட்டிடங்களில் மட்டும் இல்லை. சிறப்பாக சுகாதாரத்தை பேணுவதில்தான் உள்ளது. பஸ் நிலையங்களில் இலவச கழிப்பறை ஒன்றுகூட இல்லை. கட்டண கழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அளவு பணம் வசூலிக்கின்றனர். இதன் காரணமாக பயணிகளில் சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர் என்று பயணிகள் சிலர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

6 பஸ் நிலையங்கள்

மதுரை மாநகராட்சி பகுதியில் முன்பு பழங்காநத்தம் பஸ்நிலையம், ஆரப்பாளையம் பஸ்நிலையம், பெரியார் பஸ் நிலையம், அண்ணா பஸ்நிலையம் என 4 இடங்களில் பிரதானமாக பஸ் நிலையங்கள் செயல்பட்டன. இது தவிர, பெரியார் பஸ் நிலையம் அருகே வெளியூர் பேருந்துகளுக்கான பஸ் நிலையம் செயல்பட்டது. காலப்போக்கில் பெரியார் பஸ்நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அண்ணா பஸ்நிலையம் உள்ளிட்டவை நகர பேருந்துகள் மட்டும் வந்து செல்லும் இடமாக செயல்படத் தொடங்கின.

ஆரப்பாளையம் பஸ்நிலையத்திலிருந்து திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், கோவை போன்ற மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் உள்ள ஊர்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாட்டுத்தாவணியில் செயல்படும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் அருகிலேயே தனியார் பஸ்களுக்கான ஆம்னி பேருந்து நிலையமும் செயல்படுகிறது. இவ்வாறு ஒரே நகரில் 6 பேருந்து நிலையங்கள் இருப்பது மதுரையில் மட்டுமே.


இலவச கழிப்பறை இல்லாததால், மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வரும் இடம்.

மாட்டுத்தாவணி பஸ்நிலையம்

தமிழகத்தில் சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது பிரம்மாண்டமான பேருந்து நிலையமாக மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். ஆயிரத் துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப் படுகின்றன. கட்டமைப்புக்காகவும், சுகாதார த்துக்காகவும் இப் பேருந்து நிலையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளது.

ஆரப்பாளையம் பஸ்நிலையமும் 24 மணி நேரமும் அதிக அளவு பயணிகள் வருகையால் பரபரப்பாக இயங்குகிறது. உள்ளூர் பஸ்கள் மட்டுமே வந்து செல்லும் பெரியார் பஸ்நிலையமும், வெளியூர் பஸ்நிலையங்களுக்கு நிகராக இரவு, பகலாக இயங்கிவருகிறது. ஆனால், இந்த பஸ்நிலையங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க இலவச கழிப்பறைகளே இல்லை.

315 கழிப்பறைகள்

மதுரை மாநகர் முழுவதும் குடியிருப்பு பகுதிகள், பொது இடங்களில் 315 கழிப்ப றைகள் இருப்பதாக மாநகராட்சி கூறுகிறது. இந்த கழிப்பறைகளை பராமரிக்கும் பணி மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தனியாரிடம் குத்தகைக்குவிடப்பட்டுள்ளது. இதில், தனியாரின் பராமரிப்பில் உள்ள கழிப்பறைகளில் மாநகராட்சி நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 18 கட்டண கழிப்பறைகள் உள்ளன. ஆனால், ஒரு இலவச கழிப்பறை கூட இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறையும் பராமரிப்பின்றி எப்போதும் பூட்டியே கிடக்கிறது.

ஆரப்பாளையம் பேருந்து நிலை யத்துக்குள் 2 கட்டண கழிப்பறைகளும், ஒரு மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையும் செயல்படுகிறது. மாற்றுத்திறனாளி கழிப்பறை இருப்பதே பயணிகளுக்கு தெரியாத அளவுக்கு கட்டண கழிப்பறை நடத்துபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூல்

இந்த கட்டண கழிப்பறைகளில் சிறுநீர் கழிக்க 2 ரூபாய், மலம் கழிக்க 3 ரூபாய், குளிப்பதற்கு 5 ரூபாய் என மாநகராட்சி கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால், இதைவிட அதிகமாக வசூலிக்கப்படுகிறது. பெரியார் பஸ்நிலையத்தில் மகளிர் குழு சார்பில் நடத்தப்படும் ஒரே ஒரு கழிப்பிடத்தில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பராமரிப்பில் உள்ள கழிப்பறைகளில் சிறுநீர், மலம் கழிக்க 5 ரூபாயும், குளிப்பதற்கு 15 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. சில்லறை இல்லாவிட்டால் அவசரத்துக்குக்கூட பயணிகளால் இந்த கழிப்பறைக்குள் நுழைய முடியாது.

வேறு வழியின்றி சிலர், பஸ் நிலையத்துக்கு அருகே திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இவர்களை மிரட்டி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிக்கும் செயலில் ரவுடிகள் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக பயணிகள் புகார் தெரிவித்தால், “உங்களை யார் வெளியே போய் சிறுநீர் கழிக்கச் சொன்னது. கட்டண கழிப்பறையை பயன்படுத்த வேண்டியதுதானே” என்று போலீஸார் அலட்சியமாக பதிலளிக்கின்றனராம்.

பாதுகாப்பற்ற நிலை

போலீஸாரின் இத்தகைய போக்கால், பஸ் நிலையங்களில் திருடர்கள் சர்வசாதாரணமாக உலா வருகின்றனர். 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு என்பது வெறும் பெயரளவுக்கே உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

தனியார் பராமரிப்பில் உள்ள கட்டண கழிப்பறைகளை தொடர்ந்து கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் தடுக்க வேண்டும். அல்லது, கட்டண கழிப்பறைகள் அனைத்தையும் இலவசமாக அறிவித்து, மாநகராட்சியே நேரடியாக பராமரிப்பு பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.




எப்போதும் பூட்டிக்கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கழிப்பறை.

என்ன பாவம் செய்தோம்?

சென்னையைச் சேர்ந்த பயணி தெய்வசிகாமணி கூறுகையில், “மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையை தேடித் தேடி அலுத்துப்போய்விட்டேன். எங்குமே இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது இலவச கழிப்பறை இருந்தது. இப்போது ஏன் இல்லை? இலவச கழிப்பறை வசதி பயணிகளின் அடிப்படை உரிமை. இந்த வசதிகூட இல்லாதது வேதனையளிக்கிறது. சென்னை கோயம்பேட்டில் இலவச கழிப்பறையை சிறப்பாக பராமரிக்கின்றனர். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வரும் மதுரை மக்களும், என்னைப்போன்ற வெளியூர் பயணிகளும் என்ன பாவம் செய்தோம்?” என்றார்.

கட்டுப்படுத்த முடியவில்லை

மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கழிப்பறைகளை குத்தகைக்கு எடுத்தவர்களை பலமுறை எச்சரித்தும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

கழிப்பறை பராமரிப்பை மாநகராட்சியே நேரடியாக எடுத்து நடத்துவதில் சிக்கல் இருக்கிறது. ஒரு கழிப்பறையை பராமரிப்பதற்காக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கான ஊதியம், பராமரிப்பு செலவுக்கு என்று தனியாக நிதி ஒதுக்க வேண்டும். அதே சமயம், கழிப்பறைகளை குத்தகைக்கு விட்டால், மாநகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கிறது.

கழிப்பறையை பராமரிக்கும் பணி சாதாரண விஷயம் அல்ல. அதனால்தான் 6 இடங்களில் கழிப்பறைகளை டெண்டர் எடுத்தவர்கள், அதை நடத்த முடியாமல் கடந்த 6 மாதங்களில் விட்டுச் சென்றுவிட்டனர்.

2017-ம் ஆண்டு வரை கழிப்பறைகளை பராமரிக்க வழங்கப்பட்ட ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. அதற்குப்பின் மீண்டும் பொது ஏலம் விடுவதா அல்லது, மாநகராட்சியே நேரடியாக எடுத்து நடத்துவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தரைக் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புடன் காணப்படும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதி.

அனலாக தகிக்கும் பஸ்நிலையம்

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பைக் கருதியும், தீவிபத்துகளை தடுக்கும் வகையிலும் உணவு விற்பனை கடைகளில் சமையல் பணியை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. டீ, காபி மற்றும் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்பவர்கள், அவற்றை வேறு இடத்தில் சமைத்து, இங்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வடை, பூரி போன்றவற்றை கடையின் அருகிலேயே அடுப்பு மூட்டி சமைக்கின்றனர். தற்போது கோடை வெயிலால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் நிலைய வளாகத்துக்குள் மரங்கள் இருந்திருந்தாலாவது, வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். அதுவும் இல்லை. இந்நிலையில், உணவு விற்பனைக் கடைகளில் அடுப்பு மூட்டுவதால் வெப்பம் மிகுந்து, சுற்றுப்புறம் முழுவதும் அனலாக கொதிக்கிறது. எனவே, விதிமுறைகளை மீறி செயல்படும் கடைக்காரர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கடைகளின் முன் பயணிகளுக்கு இடையூறாக நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள விற்பனை பொருட்கள்.

சுகாதாரம் பயணிகளின் அடிப்படை உரிமை

மதுரை சுகாதார சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியதாவது:

இலவச சுகாதாரமான கழிப்பறை வசதி, பஸ்நிலையம் வரும் பயணிகளின் அடிப்படை உரிமை. ஆனால், அதில் மாநகராட்சி அக்கறை காட்டவில்லை. மதுரை பஸ்நிலையங்களில் கடைகள், ஹோட்டல்கள் வாடகை உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயின் ஒரு பகுதியை பஸ்நிலையங்களின் சுகாதாரத்துக்கும், பயணிகளின் அடிப்படை தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

இலவச கழிப்பறைகள் இல்லாததால், பஸ்நிலைய வளாகம், வெளிப்புறங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயணிகள் பயன் படுத்துகின்றனர். இதனால், பஸ்நிலையத்தின் மையப்பகுதி வரை துர்நாற்றம் வீசுகிறது. இதே நிலை தொடர்ந்தால் மாட்டுத்தாவணி பஸ்நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றதும், மதுரை மாநகராட்சி சுகாதாரத் துக்கான சிறந்த விருது பெற்றதும் கேலிக் கூத்தாகிவிடும்.

பேருந்து நிலைய வளாகத்திலும், வெளி யேயும் நிர்ணயிக்கப்பட்டதைவிட ஏராளமான கடைகள் செயல்படுகின்றன. கடைகளின் முன் நடைபாதையை ஆக்கிரமித்து விற் பனைப் பொருட்களை வியாபாரிகள் வைத்து ள்ளனர். ஹோட்டலுக்கான விறகுகளை குவித்துவைத்துள்ளனர். பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் ஆளும்கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதிகாரிகளால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. விதிமுறைகளை மீறி செயல் படும் தரைக்கடைகளில் மாதந்தோறும் ஆயிரக் கணக்கில் பணம் வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் ஸ்மார்ட் சிட்டியாக மாறவுள்ள மதுரையில் அடித்தட்டு மக்களுக்கான சுகாதார வசதிகளை இலவசமாக வழங்க வேண்டியது மாநகராட்சியின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.


பஸ்நிலைய வளாகத்தில் ஹோட்டல் பயன்பாட்டுக்காக குவித்துவைக்கப்பட்டுள்ள விறகுகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x