

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று (வெள்ளிக்கிழமை) பந்த் போராட்டம் முழுமையான அளவில் நடக்கிறது. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியான காங்கிரஸ், கூட்டணி கட்சியான திமுக, அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
புதுவையிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஏஎப்டி மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 4-வது நாளாக குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இளைஞர்கள், பல்வேறு சமூக அமைப்பினர் கொட்டும் பனியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக போராளிகள் குழு சார்பில் பந்த் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இப்போராட்டத்துக்கு ஆளுங்கட்சியான காங்கிரஸ், திமுக, அதிமுக, சிபிஐ, சிபிஎம், பாமக,விடுதலை சிறுத்தைகள், வணிகர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
பல பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்த மாணவ, மாணவிகள் ஏஎப்டி திடலில் குவிந்தனர்.
அரசு ஊழியர்கள் ஆதரவு: பந்த் போராட்டத்துக்கு புதுச்சேரி அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பிலுள்ள அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். தலைமைச்செயலகம், மின்துறை உட்பட பல துறைகளில் ஆட்கள் போதியளவில் இல்லாததால் பணிகள் நடைபெறவில்லை.
பிஆர்டிசி பஸ்கள் இயங்கவில்லை: புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக பஸ்கள் முழுமையாக இயக்கவில்லை. ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ் நிலையம் அருகே மோடியின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.