Published : 29 Oct 2014 01:27 PM
Last Updated : 29 Oct 2014 01:27 PM

ஹீரோ கனவு கண்டாலும் கிடைக்கப் போவது ஸீரோதான்: கருணாநிதிக்கு ஓ.பி.எஸ். பதிலடி

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக அரசின் வெள்ள நிவாரணப் பணிக்கள் குறித்து கருணாநிதி பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறுவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.

கருணாநிதியின் அறிக்கைக்கு முதல்வர் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், "பதவி நிலைத்திடவாவது; பதறி எழுவீர்!" என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளது, மக்களை ஏமாற்றியாவது பதவியை அடைந்திட இயலுமா என்ற பதற்றத்தில் எழுதியுள்ள அறிக்கையாகவே அமைந்துள்ளது.

"பதறிய காரியம் சிதறும்" என்பது பழமொழி. இந்த பழமொழிக்கேற்பத்தான் கருணாநிதியின் அறிக்கையும் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை துவங்கிய பின் எடுத்த மீட்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ளாமல், கற்பனை குதிரையை ஓடவிட்டு, கட்டுக் கதைகளும், புளுகு மூட்டைகளும் அடங்கிய ஒரு வெற்று அறிக்கையை அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற அற்ப எண்ணத்தில், பதற்றத்தில் வெளியிட்டு இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

கருணாநிதியின் அறிக்கை முழுவதும் கற்பனைக் கதையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி தனது அறிக்கையில், அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெள்ளப் பகுதிகளை பார்வையிடவில்லை என்று கூறி இருக்கிறார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் அங்குள்ள வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற்ற மீட்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் உன்னிப்பாக கவனித்தனர்.

தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை காரணமாகத்தான் திண்டுக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 நபர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர். அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், மூக நலத் துறை அமைச்சர் பா. வளர்மதி, உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னைய்யா, மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், பால்வளத் துறை அமைச்சர் திரு. பி.வி. ரமணா, வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் வெள்ளப் பகுதிகளைச் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துள்ளனர்.

இது தவிர, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் அவர்கள் துறை சார்பான அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்துள்ளனர்.

இது தவிர, மாநகராட்சிகளின் மேயர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவும் உறுதுணையாக இருந்துள்ளனர். இவையெல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வெளி வந்துள்ளன. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இவற்றை எல்லாம் மூடி மறைத்து அறிக்கை வெளியிட்டாலும், அதனைப் படித்து ஏமாந்து போக தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என்பதை கருணாநிதி உணர்ந்து கொள்ள வேண்டும். தி.மு.க.வினரின் இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களுக்கு கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழக மக்கள் தக்கப் பாடம் புகட்டியும், அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கருணாநிதி கற்றுக் கொள்ளவில்லை.

அடுத்தபடியாக, டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி. இது உண்மைக்கு மாறான தகவல். உண்மை நிலை என்னவென்றால், சுமார் 53,000 ஏக்கர் நிலப் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மட்டுமே நீரில் மூழ்கி உள்ளதாக தகவல் வரப் பெற்றுள்ளது. வெள்ள நீர் வடிந்த பிறகு பயிர்ச் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி மேலும் தனது அறிக்கையில், சென்ற மழையின் போது திருவாரூர் கமலாலயத்தின் வடக்கு கரை இடிந்து விழுந்ததாகவும், அந்தப் பணிக்காக சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்குவதாக கூறியதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதே கருத்தை திரு. மு.க. ஸ்டாலினும் தெரிவித்து இருக்கிறார். இந்தக் கூற்றைப் பார்க்கும்போது, "பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

வடக்கு கரை பகுதியை சீரமைப்பதற்காக அரசின் சார்பில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இடிந்து விழுந்துள்ள மேற்கு கரை பகுதியைப் பொறுத்த வரையில், அதைச் சீரமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட உள்ளன. விரைவில் இப்பணியும் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

கனமழை காரணமாக சென்னை மாநகரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளதாகவும், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், சுகாதார சீர்கேடு தலைதூக்கியுள்ளதாகவும் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். கனமழை பெய்யும் போது சாலைகள் பழுதடைவது என்பது இயற்கையான ஒன்று தான். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 797 சாலைகளில் 3070 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அவற்றில் 2505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.

இதே போன்று, கனமழை பெய்யும் போது சாலைகளிலும், சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கும் நிலை ஏற்படும்போது, அவற்றை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக காய்ச்சல் ஏற்படா வண்ணம், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறையும், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எடுத்துள்ளன.

சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 4,765 கிலோ மீட்டர் நீளச் சாலைகள் கனமழையில் சேதமடைந்துள்ளன. அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலைகளை செப்பனிடுவதற்காகவும், குளங்களை சீரமைப்பதற்காகவும் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கன மழைக்கு தமிழ்நாட்டில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கால்நடைகளை இழந்த உரிமையாளர்களுக்கும் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கருணாநிதி தனது அறிக்கையில், ரோமாபுரி தீப்பற்றி எரியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோவைப் போல, மாநகர மக்கள் எண்ணற்ற பிரச்சனைகளினால் திக்கித் திணறிக் கொண்டிருக்கும்போது, மேயர் சாதனை சாகசத்தில் சந்தோஷப்பட்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சியின் மூன்றாண்டு சாதனைகளை பட்டியலிடுவது என்பது வேறு, கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வது என்பது வேறு.

இந்த இரண்டு பணிகளையும் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது சென்னை மாநகராட்சி. மதுரையில் பத்திரிகை அலுவலகம் தீப்பற்றி எரிக்கப்பட்டு, மூன்று அப்பாவி ஊழியர்கள் மரணமடைந்தபோது வாய்மூடி மவுனியாக இருந்ததோடு, இந்தச் சம்பவத்திற்கு காரணமான இரு குடும்பங்கள் இணைந்தபோது "கண்கள் பனித்தன, இதயம் இனித்தது" என்று சொன்ன நீரோ கருணாநிதி ரோமாபுரி நீரோவை சுட்டிக்காட்டி பேசியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது மக்கள் பணிகளை கவனிக்காமல், தன் புகழ்பாடும் விழாக்களில் பங்கேற்று புளகாங்கிதம் அடைந்தவர் திரு. கருணாநிதி. 2010 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக மக்கள் வெள்ளத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், "இளைஞன்" திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர் கருணாநிதி. இப்படிப்பட்ட "நீரோ", "மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு" என்றாலே உலகத் தலைவர்கள் மத்தியில் நினைவிற்கு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பார்த்து "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்பதற்கேற்ப மனம் போன போக்கில் வேண்டுமென்றே குறை கூறி "ஹீரோ" ஆகிவிடலாம் என பகல் கனவு கண்டாலும், கிடைக்கப் போவது "ஸீரோ" தான். எனவே, அரசியல் ஆதாயத்திற்காக பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x