Published : 10 May 2016 09:00 AM
Last Updated : 10 May 2016 09:00 AM

மீத்தேன் திட்டத்தின் பாதகம் தெரிந்ததால் திமுக கைவிட்டது: மு.க.ஸ்டாலின் விளக்கம்

மீத்தேன் திட்டத்தின் பாதகம் தெரிய வந்ததால் அதை திமுக கைவிட்டது என மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த விவகாரத்தில் புகார் கூறி வந்த நிலையில், திடீரென ஸ்டாலின் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

மன்னார்குடியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு வாக்கு கேட்டு நேற்று பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த நான் (ஸ்டாலின்) தான் காரணம் என ஜெயலலிதா கூறி வருகிறார். இந்த திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டும்தான் நான். இதற்கு அனுமதி கொடுக்க வேண்டியது மத்திய அரசுதான். இந்த திட்டத்தால் பாதகம் வரும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அத்திட்டத்தை நாங்கள் கைவிட்டோம். அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் வரை இந்த திட்டம் இருந்ததே. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை. திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கை யில் இத்திட்டம் குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, திருவாரூர் அருகே கொரடாச்சேரில் நேற்று காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதிக்கு வாக்கு கேட்டு அவர் பேசியது:

ஜெயலலிதா நாட்டையும், மக்கள் பிரச்சினைகளையும் பற்றி சிந்திப்பதே கிடையாது. எம்ஜிஆர் ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை குறைக்கக் கோரி போராடிய விவசாயிகள் தாக்கப்பட்டனர். விவசாயிகளின் நிலையை அறிந்த கருணாநிதி, ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். 2006-ல் 5-வது முறையாக முதல்வராக பதவியேற்ற கருணாநிதி, விவசாயிகள் பெற்ற ரூ.7,000 கோடி கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்தார். காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பு பெற்றது கருணாநிதி ஆட்சியில்தான்.

ஜெயலலிதா தவ வாழ்வு வாழ்வது உண்மையென்றால் கொடநாட்டில் உள்ள 900 ஏக்கர் பரபரப்பான பங்களாவை ஏழைகளுக்கு கொடுப்பாரா? சட்டப்பேரவை மரபுக்கு எதிராக ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். அப்படி அறிவித்தத் திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

கருணாநிதி 1969-1976 வரை ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை புதுப்பித்து ஓட வைத்தார். திருவாரூருக்கு அரசு மருத்துவமனை, அரசுக் கல்லூரி, மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் கொரடாச்சேரி, மன்னார்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகை, செம்பனார்கோவில், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x