ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: இன்று இறுதி வாதம் தொடக்கம்

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: இன்று இறுதி வாதம் தொடக்கம்
Updated on
1 min read

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதிவாதம், நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் இன்று தொடங்குகிறது. அரசு வழக்கறிஞர் பவானி சிங் தொடர்ந்து 3 நாட்கள் வாதிடுவார் என்று கூறப்படுகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் 2004-ல் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது.

சுமார் 18 ஆண்டுகளாக நீடித்துவரும் இவ்வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல்கட்ட விசாரணை, சொத்துகள் மதிப்பீடு, மொழிபெயர்ப்பு பணிகள், குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களிட‌ம் விளக்கம் பெறுதல் என அனைத்து பணிகளும் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் ஜெயலலிதா மற்றும் அரசு தரப்பில் இறுதி வாதம் செய்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 31-ம் தேதியுடன் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். இதையடுத்து இவ்வழக்கில் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி'குன்ஹா நியமிக்கப்பட்டார். அவரது முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக வழக்கின் பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட்டன. வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என நீதிபதி டி'குன்ஹா கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உத்தரவிட்டார்

திருப்புமுனை ஏற்படுத்துமா?

வழக்கின் போக்கில் இறுதி வாதம் திருப்புமுனையை ஏற்படுத்தும் பலம் வாய்ந்தது என்பதால் ஜெயலலிதா தரப்பும், அரசு தரப்பும் கடந்த ஒருவாரமாக தீவிர தயாரிப்புகளில் மூழ்கினர். அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடந்த ஒரு வாரமாக உதவி வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அவர் தனது இறுதி வாதத்தை 3 நாட்கள் தொடருவார் என்று கூறப்படுகிறது.

பவானி சிங்கை தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார், சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் ஆகியோர் வாதிட உள்ளனர். சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பில் அவர்களின் வழக்கறிஞர்கள் தங்கள் இறுதி வாதத்தை கடந்தமுறை போல எழுத்துப்பூர்வமாக முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in