

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,818 பெண்கள், 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன், குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு இல்லாதபோது பெண்கள், கூடுதல் குழந்தைகளை பெற்று கொள்வது அதிகமாக இருந்தது.
நடவடிக்கை தீவிரம்
தற்போது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின் றன. இதற்காக வலியில்லா அறுவை சிகிச்சை, விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சமீப காலமாக 7 குழந்தைகள், 10 குழந்தைகள் மற்றும் 6 குழுந்தைகள் பெற்ற பெண்கள், மீண்டும் பிரசவத்துக்கு வருவது அதிகரித்துள்ளது.
தெரியாத சிசு மரணங்கள்
திண்டுக்கல் அருகே தோட்டனூத்தைச் சேர்ந்த 10 குழந்தைகளின் தாய், 11-வது பிரசவத்தில் இறந்தார். கடந்த சில நாள்களுக்கு முன், வேடச்சந்தூர் குப்பப்பபட்டி தங்கம்மாளுக்கு பிரசவத்தில் ஏழாவது பெண் குழந்தை பிறந்தது. திண்டுக்கல் பொன்னகரம், மின்வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த சுதா, ஒன்பது பிரசவத்துக்கு தயாராகி வருகிறார். இதுபோல, இன்னமும் கூடுதல் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு, வெளியுலகுக்கு தெரியாமல் வீடுகளிலேயே பிரசவம் நடப்பதால் கர்ப்பிணிகள், சிசு மரணங்கள் நடக்கின்றன.
கணக்கெடுக்கும் பணி
அதனால், மாவட்ட சுகாதாரத்துறை, மருத்துவநலப் பணிகள் துறை மற்றும் குடும்பநலத் துறையினர், மாவட்டம் முழுவதும் கூடுதல் குழந்தைகள் பெற்ற பெண்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்டம் முழுவதும் 2,818 பெண்கள் 3 குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு
இதுகுறித்து மருத்துவ நலப்பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘திண்டுக்கல் புறநகர் பகுதியில் 2,586 பெண்களும், நகர் பகுதியில் 232 பெண்களும், 3 குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுந்தைகளை பெற்றுள்ளனர். இதில் 519 பெண்கள் 4 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுள்ளனர். நத்தம் பகுதியில் அதிகபட்சமாக 368 பெண்கள், 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுள்ளனர். சாணார்ப்பட்டியில் 292 பெண்களும், திண்டுக்கல்லில் 276 பெண்களும், வடமதுரையில் 273 பெண்களும், நிலக்கோட்டையில் 233 பெண்களும், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 153 பெண்களும், குஜிலியம்பாறையில் 152 பெண்களும், ரெட்டியார் சத்திரத்தில் 151 பெண்களும், பழநியில் 147 பெண்களும், 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுள்ளனர். 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்ற பெண்களை கண்காணித்து அவர்களுக்கும், கணவர்களுக்கும் உடனடியாக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவும், கூடுதல் குழந்தை பிறப்பால் ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ் வுகள், உடல்நல ஆரோக்கிய குறைபாடுகள் குறித்து கவுன்சிலிங் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’ என்றார்.