Last Updated : 31 Mar, 2017 05:57 PM

 

Published : 31 Mar 2017 05:57 PM
Last Updated : 31 Mar 2017 05:57 PM

புதுச்சேரி பேரவையில் ஆளுநரை திரும்பப் பெற திமுக, அதிமுக கூட்டாக வலியுறுத்தல்

துணைநிலை ஆளுநரை திரும்பப் பெறக் கோரி திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டாக வலியுறுத்தினர். காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அதற்கு இசைவு தெரிவித்தனர். ஆனால், சட்டப்பேரவையில் விவாதிக்க முடியாது என்று முதல்வர் நாராயணசாமி பதிலளித்தார்.

புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் உரிமை மீறல் விவகாரத்தை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவ்விடத்துக்கு கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கணேசன் ஆணையராக நியமித்து தலைமை செயலர் மனோஜ் பரிதா உத்தரவிட்டார்.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் பேசியது:

சிவா (திமுக): பிசிஎஸ் அதிகாரியை மாற்ற சபாநாயகர் தீர்ப்பு தந்துள்ளீர்கள். இதே அதிகாரி தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பு புகார் தந்துள்ளேன். இவரை போல் பல அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகளை மாற்ற முடியாததற்கு ஆளுநரே காரணம்.

அனைத்து எம்எல்ஏக்களும் டெல்லி சென்று முறையிடுவோம். ஆளுநர் தலையீடு தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம். பல அதிகாரிகளை மாற்ற வேண்டியுள்ளது. ஏன் அவர்களை மாற்ற முடியவில்லை. பேரவைத் தலைவர் உத்தரவால் தான் நகராட்சி ஆணையரை மாற்றினார்கள். புதுவை துணைநிலை ஆளுநரை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும். அதிகாரியை மாற்றுவதற்காக இதுபோன்ற செயல்பட வேண்டாம். மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதால் தான் அவரை குறித்து பேரவையில் பேச வேண்டியுள்ளது. அதிகாரம் இல்லாத பதவி தேவையில்லை. விலக தயாராக இருக்கிறேன்.

அரசு கொறடா அனந்தராமன்: ஆளுநரை திரும்பப் பெறும் தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அன்பழகன் (அதிமுக): காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்க திமுகவுக்கு தைரியம் உள்ளதா. ஏன் அந்த அதிகாரி குறித்து திமுக அவையில் பேசவில்லை. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக தான் குரல் எழுப்பியது.

லட்சுமி நாராயணன் (காங்கிரஸ்): ஆளுநரை திரும்ப பெற வேண்டும் தீர்மானத்தை அதிமுகவும், திமுகவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அதை ஒட்டுமொத்த கருத்தாக எடுக்கலாம். சட்டசிக்கல் இருந்தாலும், கடிதம் மூலம் சபாநாயகர் கருத்து தெரிவிக்கலாம். துணைநிலை ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையின் கருத்தை எடுத்து, பேரவையின் செயல்பாடுகளை அவர் முடக்குவது தொடர்பாக, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கு சபாநாயகர் கடிதம் எழுத வேண்டும்.

சபாநாயகர்: ஆளுநர் செயல்பாடுகள், குறைபாடுகள் தொடர்பாக ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள்.

முதல்வர்: அதிகார போட்டி கடந்த காலத்தில் இல்லாதது இல்லை. சிலருக்கு சில அதிகாரமுண்டு. ஆளுநர் நீக்கம், மாற்றம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க முடியாது. ஆளுநர் செயல்பாடு அனைவருக்கும் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x