

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடுகிற விவசாயிகளை, தேசத் துரோகிகள் என்று தமிழக பாஜக.வினர் விமர்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துவதற்கு மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடந்த 19 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து போராட்டம் அமைதியான முறையில் நடந்து வருகிறது.
விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமாக கருதப்படுகிற நிலத்தை மத்திய அரசு அவர்களது ஒப்புதலின்றி கையகப்படுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிராக இப்போராட்டம் நடக்கிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நில கையகப்படுத்துதல் சட்டத்தின்படி 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற முடியாது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடுகிற விவசாயிகளை தமிழக பா.ஜ.க.வினர் அச்சுறுத்துகிற வகையில் செயல்பட்டு வருவது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. போராடுகிற விவசாயிகளை தேசத் துரோகிகள் என்றும், அரசியல் தலைவர்களுக்கு அறிவியல் பார்வை இல்லை என்றும் கொச்சைப்படுத்தி பேசுவதை எவரும் சகித்துக் கொள்ள முடியாது.
போராட்டக்காரர்களை எதிர்கொள்ள முடியாத தமிழக பா.ஜ.க.வினர் அவர்களிடையே பிளவை ஏற்படுத்தி சீர்குலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.
மத்திய பா.ஜ.க. அரசு கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சண்டித்தனம் செய்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுகிற கர்நாடக அரசை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் பாராமுகமாக இருந்து வருகிறது. 9 லட்சம் மாணவர்களை பாதிக்கிற நீட் தேர்வை தமிழகத்தின் மீது மத்திய பா.ஜ.க. அரசு திணித்து வருகிறது.
தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கையின் காரணமாக இலங்கை சிறைச்சாலையில் 85 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது 122 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் உள்ளிட்ட கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தான் இத்தகைய துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்குவோம் என வாக்குறுதி வழங்கிய பா.ஜ.க.வினர் இதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இதை தட்டிக் கேட்பதற்கு பதிலாக அ.இ.அ.தி.மு.க. அரசு கடிதம் எழுதி கண் துடைப்பு நாடகம் நடத்தி வருகின்றன.
அதேபோல, கடந்த 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புக்காக மத்திய அரசிடம் ரூபாய் 25 ஆயிரத்து 912 கோடியும், வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்புக்காக ரூபாய் 22 ஆயிரத்து 573 கோடியும், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியிலிருந்து மீள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூபாய் 39 ஆயிரத்து 565 கோடி வழங்க வேண்டுமென நேரிலும், கடிதம் மூலமாகவும் பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் தமிழக அரசு கேட்டதோ மொத்தம் ரூபாய் 88 ஆயிரத்து 50 கோடி. ஆனால் அடிக்கடி வானொலியில் மனம் திறந்து பேசுகிறேன் என்று நாடகமாடுகிற நரேந்திர மோடி வழங்கிய தொகையோ ரூபாய் 1940 கோடி. இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிற அ.இ.அ.தி.மு.க. ஆட்சி செய்கிற தமிழக அரசுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்துகிற லட்சணம் இதுவாகத் தான் இருக்கிறது. இதற்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி, தட்டிக் கேட்க அ.இ.அ.தி.மு.க. அரசு அஞ்சுவது ஏன்? தயங்குவது ஏன்?
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சித்து பாரபட்சம் காட்டி வருகிற மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக அ.இ.அ.தி.மு.க. அரசு உரிமைக்குரல் எழுப்பி போராட முன்வர வேண்டும். மத்திய அரசின் வஞ்சகப் போக்கிற்கு எதிராக தமிழக மக்களை அணி திரட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.