

கன்னியாகுமரி மாவட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ. 212 கோடியை கடந்த மே மாதம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், தமிழக அரசு துரிதகதியில் பணியைத் தொடங்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அளவில் சுற்றுலா தலங்கள் நிறைந்ததாக கன்னியாகுமரி மாவட்டம் விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், கன்னியாகுமரி மாவட்ட சாலைகள் அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்து போக்குவரத்துக்கே தகுதியற்ற நிலையில் உள்ளன. இம்மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அதற்கு இணையாக இங்குள்ள மோசமான சாலைகளும், ஓட்டை உடைசல் பேருந்துகளும் பிரசித்தி பெற்றவை.
மே மாதம் ஒதுக்கீடு
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட சாலைப் பணிகளுக்காக, கடந்த மே மாதம் ரூ. 212 கோடி ஒதுக்கீடு செய்தார். ஆனால் அந்த பணத்தில் இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நிதி ஒதுக்கீடு விபரம்
ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு சாலையை சீரமைக்க ரூ. 9.20 கோடி, குளச்சல் திருவட்டாறு சாலைக்கு ரூ. 9.70 கோடி, அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ. 2 கோடி, இரணியல் ராஜாக்கமங்கலம் சாலைக்கு ரூ. 1.95 கோடி, தக்கலை-தடிக்காரன்கோணம் சாலைக்கு ரூ. 3.20 கோடி, கோட்டாறு- மணக்குடி சாலைக்கு ரூ. 2.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தர்மபுரம் சாலையை சீரமைக்க ரூ. 1.65 கோடி, மார்த்தாண்டம்- கருங்கல் சாலைக்கு ரூ. 1.70 கோடி, சுவாமியார்மடம்-மேக்கோடு சாலைக்கு ரூ. 3.20 கோடி, தெரிசனம்கோப்பு- சுருளக்கோடு சாலைக்கு ரூ. 3.80 கோடி, கன்னியாகுமரி முதல் பழைய உச்சகடை வரையிலான சாலைக்கு ரூ.66 கோடி, பரசேரி திங்கள்சந்தை, புதுக்கடை சாலைக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நிதியை பயன்படுத்தி இதுவரை பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, கன்னியாகுமரி தொகுதியில் பாஜகவிடம் தோல்வி அடைந்ததுடன், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே சாலை பணியில் மெத்தனம் காட்டப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
விரைவில் தொடங்கும்
நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘38 சாலைகளுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அலுவல் ரீதியான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இப்பணிகள் முடிந்ததும் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும்’ என்றார் அவர்.