

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மற்றொரு சாதனையும் அதிமுக வசமாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத் தில் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. இதன்மூலம், மக்களவையில் பாஜக (282), காங்கிரஸுக்கு (44) அடுத்தபடியாக 3-வது இடத்தை அதிமுக பிடித்தது. 4-வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (34) உள்ளது.
மாநிலங்களவையை பொறுத்த வரை, தமிழகத்தில் 11 மற்றும் புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 12 எம்பிக்களுடன் 4-வது இடத்தில் அதிமுக இருந்தது. சமீபத்தில் நடந்த மாநிலங்களவை எம்பிக்களுக்கான தேர்தலில் அதிமுகவுக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
மாநிலங்களவையில் காங் கிரஸுக்கு 64, பாஜகவுக்கு 49 மற்றும் சமாஜ்வாடிக்கு 15 உறுப்பினர்கள் உள்ளனர். 4-வது இடத்தில் 13 எம்பிக்களுடன் அதிமுக உள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து அதிமுகவின் பலம் தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தின் எந்த கட்சியும் இந்த அளவு எம்பிக்கள் பலத்தை கொண்டிருந்ததில்லை என கூறப்படுகிறது.
அதிக எம்பிக்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளதன் மூலம், பலம் பொருந்திய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. இதனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக் களுக்காக அதிமுகவின் ஆத ரவை பாஜக கோரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காகத்தான் தற்போது மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு ஒப்புதல், உணவுப் பொருள் சிறப்பு ஒதுக்கீடு என தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப் படுகிறது.
மேலும், அடுத்த ஆண்டு நடக்கும் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களுக்காக அதிமுகவின் ஆதரவை தக்க வைக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.