Published : 23 Mar 2017 02:01 PM
Last Updated : 23 Mar 2017 02:01 PM

ஏப்ரலில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: டிடிவி தினகரன்

ஏப்ரலில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்புமனுக்கள் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் வேட்பு மனுக்களை பெற்று வருகிறார்.

வேட்பாளர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டலம் 4 அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் பி.நாயரிடம் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் கட்சி சின்னமான தொப்பியை அணிந்தபடி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''ஆர்.கே.நகரில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இரட்டை இலை சின்னம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு சதியே காரணம். சதிக்கு யார் காரணம் என்பதை மக்கள் அறிவர். ஏப்ரலில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம். ஜெயலலிதாவின் பிரதிநிதியாக இருந்து தேர்தலுக்கு முன் ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலை முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்'' என்று டிடிவி தினகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x