

சூதாட்டமாக இல்லாமல், ஜல்லிக்கட்டை கலாச்சாரம் சார்ந்த விளையாட்டாக நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குலுவாடி ஜி. ரமேஷ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரைச் சேர்ந்த எம். ராஜேந் திரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
களமாவூரில் மாசி மாதம் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆட்சியர், எஸ்பியிடம் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. மாடுகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக அதிக உயரத்தில் பேரிகார்டு அமைக்கப்படும். மாடுபிடி வீரர்கள், காளைகள் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். இதனால் ஜல்லிக்கட்டால் யாருக்கும் பாதிப்பு வராது. எங்கள் கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம்.
இந்தாண்டு, மார்ச் 18-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து, அதற்கு அனுமதியும், பாதுகாப்பும் கோரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் 11.3.2017-ல் மனு அளித்தோம். இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் டி.ரமேஷ்குமார் வாதிடும்போது, அண்மையில் தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
இதையடுத்து, பழங்காலத்தில் நடத்தப்பட்டது போல் ஜல்லிக்கட்டை ஒரு பாரம்பரிய, கலாச்சார விளையாட்டாக மட்டுமே நடத்த வேண்டும். சூதாட்டமாக நடத்தக்கூடாது. மனுதாரர் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.