சென்னை: 723 முறை போன் செய்து பெண் காவலர்களுடன் ஹலோவளாவிய லாரி கிளீனர் கைது

சென்னை: 723 முறை போன் செய்து பெண் காவலர்களுடன் ஹலோவளாவிய லாரி கிளீனர் கைது
Updated on
1 min read

ஒன்றரை ஆண்டுகளில் 723 முறை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, பெண் காவலர்களிடம் ஆபாசமாகப் பேசிய லாரி கிளீனரை காவல் துறையினர் கைது செய்தனர். அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்பவர்களிடம் கனிவாகப் பேசவேண்டும் என்பதற்காக, இந்த சேவை எண்ணைத் தொடர்பு கொள்பவரிடம் பெரும்பாலும் பெண்களே பேசும்வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ''வணக்கம். காவல் கட்டுப்பாட்டு அறை, தவறாக அழைத்திருந்தால் இணைப்பை துண்டிக்கவும். காவல் உதவி தேவையென்றால் எண் ஒன்றை அழுத்தவும்" என்று தெரிவிக்கும். தேவையில்லாத அழைப்புகளை தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை இரவு கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பன்னீர் செல்வத்துக்கும் பெண் காவலருக்கும் நடந்த உரையாடலைத் தருகிறோம்: பன்னீர்செல்வம் : என்னங்கடி… போன் செஞ்சா உடனே எடுக்க மாட்டீங்களா? பெண் காவலர் : சார், உங்களுக்கு என்ன வேணும்? பன்னீர்செல்வம் : நீதான் வேணும்... கொஞ்சம் வாரீயா...? (நாகரிகம் கருதி இதோடு நிறுத்துகிறோம்) இப்படி எல்லை மீறி பெண் காவலருக்கு தொல்லை கொடுத்த அவர், தவறான வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறார். பொறுமையிழந்த பெண் காவலர்கள் பன்னீர்செல்வத்தின் செயலுக்கு முற்றுப்புள்ளிவைக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதுபற்றி கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் முருகன், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு அருகே வடக்கு நெம்மேலி ஈ.வே.ரா. தெருவை சேர்ந்த லாரி கிளீனர் பன்னீர்செல்வம்தான் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண் காவலர்களுக்கு தொல்லை கொடுத்தவர் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பெண் காவலரை வைத்தே பன்னீர்செல்வத்திடம் பேசவைத்து, செங்கல்பட்டில் ஓர் இடத்துக்கு வரச்சொல்லி வியாழக்கிழமை கைது செய்தனர். பன்னீர்செல்வம் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்புச் சாதனத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளும் அவர் மீது பாய்ந்தது. பன்னீர்செல்வத்திடம் நடத்திய விசாரணையில், "100-க்கு போன் செய்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நண்பன் கூறினான். போன் செய்யும் போதெல்லாம் பெண்கள் பேசிய தால், சந்தோ சத்தில் தொடர்ந்து பேசினேன்" என்றார். கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் முருகன், "பொது மக்களின் அவசரத் தேவைக்கான தொலை பேசி அழைப்பு எண் 100. தயவுசெய்து இதை யாரும் தவறாகவோ விளையாட்டாகவோ பயன்படுத்த வேண்டாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in