

"கவலையில் இருக்கும் மு.க.அழகிரிக்கு ஆறுதல் சொன்னால்கூட தப்பா? மிகவும் கொடுமையாக இருக்கிறதே?"என்று நீக்கப்பட்ட தி.மு.க.வினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர்கள் கூறியது.
பி.எம்.மன்னன்
“கட்சித் தலைமையின் நடவடிக்கைக்குக் கட்டுப்படுகிறேன். தலைவரின் உண்மைத் தொண்டனாக, அழகிரியின் தம்பியாக கடைசிவரை செயல்படுகிறேன். வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.
முபாரக் மந்திரி
“கட்சியைவிட்டு நீக்கியதுகூட வருத்தமில்லை. பொதுச் செயலாளர் பேராசிரியரின் அறிக்கையில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ஒரு வார்த்தை வருகிறது.
அதுதான் ரொம்ப வருத்த மாக இருக்கிறது. மதுரையில் தி.மு.க.வினர் கட்சி விளம்பரம் எங்குமே தென்படக்கூடாது என்று அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கிறபோது, கட்சிக்காக போஸ்டர் ஒட்டியது தவறா?
அண்ணன் வருத்தத்தில் இருப்பதால், அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் ‘டோன்ட் ஒரி’ என்று ஆங்கிலத்தில் போஸ்டர் ஒட்டினேன். அண்ணனுக்கு ஆறுதல் சொன்னால்கூட தப்பா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? மிகவும் கொடுமையாக இருக்கிறது. பிறந்த நாள் அதுவுமாக அவருக்கு இவ்வளவு சோதனை தரக்கூடாது” என்றார்.
அன்பரசு இளங்கோவன்
‘இனியொரு விதி செய்வோம்’ என்ற போஸ்டரை ஒட்டியதற்காக என்னைக் கட்சியில் இருந்து நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. உண்மையிலேயே, அண்ணன் பிறந்த நாளன்று கட்சிக்குள் இருக்கிற எல்லா தலைவர்களும் ஒற்றுமையாகிவிட வேண்டும் என்ற ஆசையில்தான், அந்த போஸ்டரை அடித்தேன். அந்த போஸ்டரை கவனித்துப் பார்த்தால் தெரியும். அதில் அண்ணனுடன், மு.க.ஸ்டாலினும் இருப்பார்.
மதுரையில் இந்த ஒற்றுமை நிகழ்ந்துவிடக்கூடாது என சிலர் காத்திருக்கிறார்கள். அவர்கள்தான், அழகிரியின் ஆதரவாளர்களைக் கண்காணிப்பதை ஒரு திட்டமாக எடுத்துக்கொண்டு வேலை பார்த்தார்கள். அவர்களுக்குத் தோதாக என் போஸ்டர் அமைந்து விட்டது. அந்த போஸ்டரைக் கண்டித்து தலைவர் அறிக்கை விட்டபோதே, மன்னிப்புக் கடிதம் அனுப்பிவிட்டோம். ஆனால் இப்போது நடவடிக்கை எடுத்திருக் கிறார்கள். பரவாயில்லை. கடைசி வரை கட்சிக்கும், அண்ணனுக்கும் விசுவாசமாக இருப்போம்.
எழில்மாறன்
அண்ணனின் பேட்டி ஒளிபரப் பாவது குறித்து இரு நாளைக்கு முன்பே, புதிய தலைமுறை பாருங்கள் என்று போஸ்டர் ஒட்டினேன். அதைத்தவிர நான் எந்தத் தவறும் செய்யவில்லை. கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்.
பாலாஜி
ஆண்டுதோறும் அண்ணனை வாழ்த்தி வித்தி யாசமாக போஸ்டர் அடிப்பேன். இந்த ஆண்டு என்ன போஸ்டர் அடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, நடவடிக்கை எடுத்து விட்டார்கள் என்றார்.
பி.எம்.மன்னன்- தலைமை செயற்குழு உறுப்பினர், முபாரக் மந்திரி- 7-ம் பகுதி செயலர், (இவர்கள் இருவரும் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையானவர்கள்), அன்பரசு இளங்கோவன்- கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர், எழில்மாறன்- பொதுக் குழு உறுப்பினர், பாலாஜி- 8-ம் பகுதி இளைஞரணி முன்னாள் அமைப்பாளர்.
யார் இவர்கள்? காரணம் என்ன?
நடவடிக்கைக்கு உள்ளான அனைவருமே அழகிரியின் ஆதரவாளர்கள். அன்பரசு இளங்கோவன் அழகிரி மற்றும் கனிமொழி ஆதரவாளர்.
அழகிரியின் வலதுகரமான பி.எம்.மன்னனுடன் தீவிரமாக செயல்பட்டது, கட்சிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது உள்ளிட்டவை இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.
இதற்கான ஆதாரங்களை மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதே நடவடிக்கைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதை மறுக்கிறார்கள்.