

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளி களை நெருங்கிவிட்டோம். விசா ரணை இறுதிகட்டத்தை அடைந் துள்ளது என சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 29.3.2012-ல் திருச்சி பாலக்கரையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை நடைபெற்று 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை குற்றவாளிகள் ஒருவரைக்கூட போலீஸார் கைது செய்யவில்லை. இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பஷீர்அக மது முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் சார்பில் 12-வது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு வழக்கறிஞர் கந்த சாமி வாதிடும்போது, “ராமஜெயம் கொலை தொடர்பாக 300 காரணங் கள் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் ரவி வாதிடும்போது, “சிபிசிஐடி போலீஸார் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனவே சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கைகளை படித்து பார்க்க வேண்டியதுள்ளது என்று கூறி, விசாரணையை ஏப். 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.