Published : 01 Apr 2014 11:24 AM
Last Updated : 01 Apr 2014 11:24 AM

எம்.பி.க்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு வழங்கும் சலுகைகள், வசதிகள் குறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து திண்டுக்கல் ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்.இளஞ்செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகில் வேறு எந்த நாட்டில் மக்களவை உறுப்பினருக்கும் இல்லாத அளவில் இந்தியாவில் எம்.பி.க்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது.

மக்களவை உறுப்பினருக்கு மாதச் சம்பளம் ரூ.16,000, மாதத் தொகுதிப்படி ரூ.20,000, மாத அலுவலகப்படி ரூ.4,000, மாத கடிதச் செலவுக்கு ரூ.2,000, உதவியாளர் ஊதியம் ரூ.14,000, ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்பதற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுமட்டுமில்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 கிலோ லிட்டர் தண்ணீரும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக இரண்டு தொலைபேசிகளில் ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர்நெட்டில் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச் சீட்டுகள், 34 முறை இலவச விமானப் பயணங்கள் வழங்கப்படுகிறது. தொகுதியில் இருந்து மக்களவையில் கலந்துகொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு பயணச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தன் குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள் மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபார்த்தும் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி. நமக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x