பட்டாசு வெடிக்கும்போது விபத்து: சென்னையில் 30 பேர் கண்கள் பாதிப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பட்டாசு வெடிக்கும்போது விபத்து: சென்னையில் 30 பேர் கண்கள் பாதிப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சென்னையை சேர்ந்த 30 பேருக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவர்களுக்கு அகர்வால் கண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் பட்டாசு வெடித்த 30 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படவே அவர்களுக்கு சென்னை தனியார் கண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அகர்வால் கண் மருத்துவமனையின் மூத்த கண் சிகிச்சை மருத்துவர் செளந்தர்யா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தீபாவளியின்போது பட்டாசு விபத்துக்கள் ஏற்படுவது வழக்கம். பட்டாசு விபத்துக்களில் உடலில் மற்ற பாகங்களை விட கண்கள்தான் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளியன்று வெடி வெடித்த போது கண்களில் தீக்காயமடைந்த 30 பேர் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த 30 பேரில் 25 பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே இருந்தது, அதனை மருந்து மாத்திரைகளால் சரி செய்துவிடலாம். ஆனால் பட்டாசு விபத்தில் 5 பேருக்கு கண்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கண்களிலுள்ள விழித்திரைகள் கிழிந்து ரத்தம் வழிந்த நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளோம். அறுவை சிகிச்சைக்கு பிறகுதான் அவர்களின் கண்களின் தன்மை பற்றி எதையும் கூற முடியும். சென்றாண்டு தீபாவளியின் போது பட்டாசு விபத்தில், 120 பேர் கண்களில் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றனர். இந்தாண்டு 30 பேர் மட்டுமே பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

100-க்கும் அதிகமானோர் காயம்

சென்னை மாநகரில் மட்டும் சுமார் 100-க்கும் அதிகமானோர் பட்டாசு தீக்காயங்களுக்குள்ளானார்கள். பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம்பட்ட 27 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றனர். மேலும் கை மற்றும் மூட்டு பகுதியில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பட்டாசால் தீக்காயம்பட்ட 20 பேர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைபெற்றனர். மேலும் அங்கு, கை கால்களில் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், அவர் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில், பட்டாசு விபத்தில் சிக்கிய 50-க்கும் அதிகமானோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in