

தமிழக மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்;லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த 3 நாட்களில் லட்சுமி தேவியையும்,கடைசி 3 நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில் மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும்.
விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும்,உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட தனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.