

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளித்தது மற்றும் தமிழகத்துக்கு உணவு தானிய சிறப்பு ஒதுக்கீடு அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரி சலைக் குறைக்கவும், பொது போக்கு வரத்து வசதியை மேம்படுத்தவும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. இத்திட்டத்தில், 2 வழித் தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் இருந்து உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 24 கி.மீ. தொலைவுக்கு முதல் பாதை அமைகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ. தொலைவுக்கு 2-வது பாதை அமைகிறது.
இதற்கிடையில், வண்ணாரப் பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பாதையை விரிவுபடுத்த தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, கூடுதலாக 9.51 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்டமாக நீட்டிக்கப்படுகிறது. ரூ.3,770 கோடி மதிப்பிலான இந்த விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதை அறிந்தேன். கடந்த 2014 ஜூன் 3 மற்றும் 2015 ஆகஸ்ட் 7-ம் தேதிகளில் நான் அளித்த 2 கோரிக்கை மனுக்களில் இத்திட்டத்துக்கு விரைவாக அனுமதி வழங்கும்படி கோரியிருந்தேன். இத்திட்டம் மூலம் மக்கள்தொகை மிகுந்த வடசென்னை புறநகர் பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.
சென்னை பெருநகரம் வேகமாக வளர்ச்சி அடைவதால் போக்குவரத்தும் அதிக அளவில் வளர்ந்துள்ளது. பொது போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் வகையில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும்.
சென்னை மெட்ரோ ரயில் செயல்பாடுகளை கடந்த 2015 ஜூன் 29-ல் தொடங்கி வைத்தேன். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவருவது குறித்து 2003-ம் ஆண்டே திட்டமிடப்பட்டது. கடந்த 2011 மே முதல் தற்போது வரை, மெட்ரோ ரயில் திட்டத்தில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் பாதை பொதுமக்களுக்கு சவுகரியமான, பிரபலமான பொது போக்குவரத்தாக உள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், விரிவாக்கப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் தொடங்கும் என தெரிகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்ட விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியதற்காக தமிழக அரசு மற்றும் சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதகாலத்துக்கு உணவு தானிய சிறப்பு ஒதுக்கீட்டை வழங்கும்படி தமிழக அரசு சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.